கேஸ் குழாய் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து! தாய் மற்றும் மகள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்!
பெங்களூருவில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து, அதன் காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் பலத்த காயமடைந்து, அதோடு தாய் மற்றும் மகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெங்களூர் பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பன்னரகட்டா சாலை தேவரசிக்கனஹள்ளியில் அஸ்ரிதா என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது.
இந்தக் குடியிருப்புகளில் நான்கு மாடிகளைக் கொண்டது ஆகும். இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணி அளவில் அந்த குடியிருப்பில் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், அங்கு ஏற்பட்ட தீயை அணைக்க தேவையான நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் தீ மளமளவென பரவி நான்கு மாடிகளுக்கும் பற்றி எரிந்து விட்டது. இதனால் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் மிகுந்த சிரமப்பட்டனர். ஆனாலும் தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தீ முழுவதும் அணைக்கப்பட்டது.
அதன்பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த நபர்களை மீட்க தீயணைப்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அடுக்குமாடி குடியிருப்பு 210 என்ற அறையில் வசித்த லக்ஷ்மிதேவி என்ற 82 வயதான தாயும், அவருடைய மகளான பாக்ய ரேகா 59 வயதான பெண்ணும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் அங்கு வசித்த மேலும் 5 பேரும் பலத்த தீக்காயம் அடைந்து உள்ளனர். அவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களில் இரண்டு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததாகவும், அதனால் ஏற்பட்ட தீ விபத்து ஆக இருக்கலாம் என்றும், மேலும் அங்குள்ள வீடுகளுக்கு செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு அதன் மூலம் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும், போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்து நடந்தபோது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஏராளமானோர் வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளியே சென்று இருந்ததன் காரணமாக இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இல்லாவிட்டால் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். அங்கு நான்கு மாடிகளில் இருந்த வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகி உள்ளன.
அந்த வீடுகளில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி உள்ளது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த தீ விபத்து அந்த குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.