14 மாவட்டங்களில் கனமழை உறுதி! காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம்!
மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும் பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக திருப்பூரில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்றும் நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் நாளை 28 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. நேற்று 8:30 மணி உடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் 18 சென்டிமீட்டர், ஏத்தாப்பூர் 13 சென்டிமீட்டர், சங்ககரி துர்க்கம், நீடாமங்கலம் தலா 9 சென்டிமீட்டர், செட்டிகுளம், நாவலூர் கொட்டபட்டு தலா 8 சென்டி மீட்டர், அரவக்குறிச்சி ஏழு சென்டி மீட்டர், கள்ளிக்குடி ஆத்தூர் தலா 6 சென்டிமீட்டர், திருப்பத்தூர், சிவகங்கை, காரியாபட்டி, பாரூர், ஜமுனாமரத்தூர் தலா 5 சென்டிமீட்டர் கூடலூர் பஜார், வலங்கைமான், பொன்னமராவதி தலா 4 சென்டிமீட்டர் என பல இடங்களில் மழை பெய்துள்ளது.