பெங்களூரில் மீண்டும் 5 மாடி குடியிருப்பு சாய்ந்தது! பீதியில் பொது மக்கள்!
பெங்களூர் ராமமூர்த்தி நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கஸ்தூரி நகர் அருகே டாக்டர்ஸ் லே அவுட் என்ற இடத்தில் இரண்டாவது கிராசை சேர்ந்த இடத்தில் தரை தளத்துடன் கூடிய 5 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் ஆயிஷா பெய்க் என்பவருக்குச் சொந்தமானது என்று கூறுகிறார்கள். அந்த கட்டிடத்தில் 8 வீடுகள் உள்ள நிலையில் அவற்றில் மூன்று வீட்டில் மட்டுமே குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மற்ற ஐந்து வீடுகளும் காலியாகவே உள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் திடீரென்று 5 மாடி குடியிருப்பின் ஒரு பகுதி மட்டும் லேசாக சாய்ந்தது. அதன் காரணமாக அங்கே வசித்த வீடுகளிலிருந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, அங்கிருந்து வெளியேறி விட்டனர். அவர்களது உடைமைகள் வீட்டிலேயே இருந்தது. பின்னர் நேற்று மதியம் வரை அப்படியே இருந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.
கட்டிடத்தின் ஒரு பகுதி அப்படியே ஒரு பக்கத்து வீட்டின் மீது சாய்ந்தது. ஆனால் குடியிருப்பில் வசிப்பவர்கள் காலையிலேயே வெளியேறி விட்டதன் காரணமாக, அங்கு எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். இது பற்றி அறிந்ததும் அங்கு ராமமூர்த்தி நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மேலும் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு விட்டது. அதன் பின் முன்னெச்சரிக்கையாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். இது பற்றி அறிந்த மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா சம்பவ இடத்திற்கு சென்று இடிந்து விழுந்த கட்டிடங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் இது குறித்து மாநகராட்சி கமிஷனர் நிருபர்களிடம் கூறும் போது, பெங்களூரு கஸ்தூரி நகரில் தரை தளத்துடன் இரண்டு மாடியில் வீடு கட்டுவதற்கு மட்டுமே கடந்த 2012 ஆம் ஆண்டு உரிமையாளர் அனுமதி பெற்றுள்ளார்.
ஆனால் 2014ல் தான் கட்டிட வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் அனுமதியை மீறி ஐந்து மாடிக் கட்டிடத்தை கட்டி உள்ளார்கள். வீட்டுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை பெற்று விட்டு வேறு ஒருவரிடம் விற்றுவிட்டார். ஆனால் மாநகராட்சி இடம் இருந்து என்.ஓ.சி பெறவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் விதிமுறைகளை மீறி கூடுதலாக 3 மாடி கட்டிடம் கட்டியதால் சாய்ந்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது சிவில் மற்றும் கிரிமினல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் மூன்று மாடிகளை கூடுதலாக கட்டியதன் காரணமாகவும், தரமற்ற கட்டுமானப் பொருட்களாலும் வீடு கட்டியதால், 7 ஆண்டுகளிலேயே இடிந்து விழுந்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆடு கோடி பகுதியில் மூன்று மாடி பழமையான கட்டிடம், அதன்பிறகு டைரி சர்க்கிலில் உள்ள கர்நாடகா பால் கூட்டமைப்புக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடமும், அதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகரபாவி அருகே மூன்று மாடி கட்டிடமும் இடிந்து விழுந்து உள்ளன. தற்போது 5 மாடி கட்டிடம் இடிந்து உள்ளது. பெங்களூருவில் தொடர்ந்து இந்த சம்பவங்கள் நடந்து வருவதால் மக்களிடையே மிகுந்த பீதியை ஏற்பட்டுள்ளது.