நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக தற்போதே நிர்வாகிகளை முடுக்கி விட்ட கமல்ஹாசன்!

பல வருடங்களாக திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக தெரிவித்து தன்னுடைய ரசிகர்களுக்கு ஆவலை ஏற்படுத்தி வந்தார். அதாவது அவர் கடந்த 1996 வருடம் வாக்கிலேயே அரசியலுக்கு வருவார் என்று அவருடைய ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் அரசியலுக்கு வராதது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதன் பின்னர் அரசியல் தொடர்பாக அவர் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை.

இந்த சூழ்நிலையில் திரைத்துறையில் ரஜினிக்கு போட்டியாக நடித்துக்கொண்டிருந்த உலகநாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தோற்றுவித்து சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டார். அதற்கு முன்பாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார், இதில் அவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கணிசமான வாக்குகள் கிடைத்தன. அதனடிப்படையில் உற்சாகத்துடன் அடுத்தடுத்த தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார் கமல்ஹாசன்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் பெரிய அளவில் தன்னை நிரூபிக்கவில்லை, அந்த கட்சி பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நகர்புற வாக்காளர்கள் இடையே சற்று ஆதரவைப் பெற்றிருந்த காரணத்தால், தற்சமயம் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்காக அந்த கட்சி தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று அந்தக் கட்சியின் மாநில செயலாளர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவுறுத்தி இருக்கிறார்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகளும் அந்த பணிகளை ஆரம்பித்து செய்து வருகிறார்கள், இது தொடர்பாக திருநெல்வேலியைச் சார்ந்த அந்த கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவிக்கும்போது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புறங்களில் கட்சியை பலப்படுத்த நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். இருந்தாலும் நகர்ப்புறங்களில் எங்களுடைய கட்சிக்கு வாக்கு வங்கி இருக்கிறது, ஆகவே இந்த தேர்தலில் கணிசமான இடங்களில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என தலைவர் கமலஹாசன் விருப்பம் கொண்டு இருக்கிறார். ஆகவே இப்போது இருந்து தேர்தலுக்கான பணிகளை ஆரம்பிக்குமாறு தலைவர் கமலஹாசன் உத்தரவிட்டிருக்கிறார் என்று அந்த நிர்வாகி கூறியிருப்பதாக தெரிகிறது.

Leave a Comment