கடலில் மிதந்து பயணம் செய்த நாய்! எதிர்பாராமல் குதித்து மீட்ட நபர்!

Photo of author

By Hasini

கடலில் மிதந்து பயணம் செய்த நாய்! எதிர்பாராமல் குதித்து மீட்ட நபர்!

அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாடர்டெய்ல் கடற்கரையில் இருந்து, ஜக்கேப் டூடுயிட் என்ற நபர் தனது நண்பர்களுடன் நேற்று படகின் மூலம்  அட்லாண்டிக் கடலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, கடலில் செல்லப்பிராணியான வீட்டு வளர்ப்பு நாய்க்குட்டி ஒன்று தன்னந்தனியே தத்தளித்துக் கொண்டிருந்தது.

இதை பார்த்த ஜக்கேப் சிறிதும் யோசிக்காமல் உடனடியாக கடலில் குதித்து, தத்தளித்த நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டு வந்தார். படகில் இருந்த அவரது சக நண்பர்கள் குளிரில் நடுங்கியபடி இருந்த நாய்க்குட்டியின் உடலை துவட்டி விட்டனர்.

நாய்க்குட்டி நடுக்கடலுக்கு எப்படி வந்தது. இது யாருடைய நாய்க்குட்டி என்ற விவரங்கள் தெரியாததால், இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு அந்த நாய்க்குட்டியின் கழுத்தில் அணிந்திருந்த பட்டையில் நாய்க்குட்டியின் உரிமையாளரின்  விவரங்கள் தெரிந்தது. அதன் பிறகு அவரை தொடர்பு கொண்ட ஜேக்கப் செல்லப்பிராணியான நாய்க்குட்டி தங்களிடம் பாதுகாப்பாக உள்ளது என கூறினார்.

அதனை தொடர்ந்து, கரை திரும்பிய ஜேக்கப்பை செல்லப்பிராணி நாய்க்குட்டியின் உரிமையாளர் சந்தித்தார். அவரிடம் செல்லப்பிராணியை ஜேக்கப் பத்திரமாகவும் ஒப்படைத்தார். உரிமையாளர் வளர்ப்பு நாய்க்குட்டியை படகின் மூலம் கடலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது, படகில் யாரும் சற்றும் கவனிக்காத நேரத்தில் நாய்க்குட்டி கடலில் குதித்துள்ளது. நாய்க்குட்டி படகில் தான் உள்ளது என்ற எண்ணத்தில் அதன் உரிமையாளர் இருந்துள்ளார். ஆனால், ஜேக்கப்பின் அழைப்பிறகு பிறகுதான் தனது செல்லப்பிராணி நாய்க்குட்டி கடலில் குதித்துள்ளது என்பதையும் அதை ஜேக்கப் மீட்டுள்ளார் என்பதையும்  தெரிந்து கொண்டாராம்.

நாய்க்குட்டியை ஜேக்கப் கடலில் குதித்து மீட்ட காட்சிகளை ஜேக்கப்பின் சக நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.