கள்ளகுறிச்சி பட்டாசு கடை தீ விபத்தில் வெளிவந்த பகீர் உண்மைகள்! பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் ஒரு மளிகைக் கடை உள்ளது. அங்கு வருடா வருடம் தீபாவளி சமயங்களில் பட்டாசுகளையும் விற்பனை செய்வாராம் அந்த கடையின் முதலாளி. அவரது பெயர் செல்வகணபதி. மேலும் கடையின் மேல் தளத்தில் உள்ள அறையையும் குடோனாக பயன்படுத்தி, தற்போது விற்று லாபம் பார்க்கலாம் என அங்கும் பட்டாசுகளை சேகரித்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் சுமார் ஒரு 6.20 மணி இருக்கும், அப்போது யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் பட்டாசு கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. அதன்காரணமாக பட்டாசுகள் வெடிக்க தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதற ஆரம்பித்தது.
அப்போது ஏற்பட்ட தீப்பிழம்புகள் வானம் வரை உயர்ந்து சென்றன. இதை பார்த்ததும் மும்முனை சந்திப்பில் தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்க வந்திருந்த மக்கள் கூட்டம் அலறியடித்து நாலாபுறமும் ஓட ஆரம்பித்தனர். இந்த விஷயம் தீயணைப்பு துறைக்கு தெரியவந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த போதிலும் அங்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயின் காரணமாக அவர்களால் அருகில் கூட செல்ல முடியாத நிலையே காணப்பட்டது.
மேலும் அங்கு பட்டாசுகள் அதிகம் இருந்தது. அதோடு பக்கத்து கடையில் இனிப்புகள் செய்ய வேண்டி தீபாவளி பலகாரங்கள் செய்வதற்காக முன்னேற்பாடாக, பல சிலிண்டர்கள் அதாவது 10 முதல் 15 சமையல் சிலிண்டர்கள் வாங்கி அடுக்கப்பட்டுள்ளன. இந்த தீ விபத்தில் அந்த சமையல் சிலிண்டர்களும் ஒவ்வொன்றாக வெடிக்க ஆரம்பித்தன.
அதனால் அங்கு வெடிகுண்டு வெடித்தது போன்ற சத்தங்கள் ஏற்பட்டதோடு, நிலைமை கை மீறிப் போனது. சுமார் இரண்டு மணி நேரங்களை கடந்து இரவு எட்டு மணி சுமாருக்கு தான் தீயணைப்பு வீரர்கள் விபத்து நடந்த கட்டிடத்திற்கு அருகிலேயே செல்ல முடிந்தது. அந்த அளவுக்கு பட்டாசுகள் வெடித்து சிதறிய நிலையில் இருந்தது.
அதன் பிறகு கடையின் உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல் கருகி பிணமாக கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் பட்டாசு கடையின் ஒரு பகுதி சுவர் அருகே இருந்த செல்போன் கடையின் மீது இடிந்து விழுந்தது.
அந்த சமயத்தில் கடையின் முன்பு நின்றிருந்த சங்கரா புரத்தைச் சேர்ந்த ஷாஆலம் என்கின்ற லட்டு, காளலித் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சைக்கிளின் மூலம் பூ வியாபாரம் செய்தவர் பஷீர் என்ற 72 வயது நபர் உட்பட சிறிய கல் விழுந்து, அதன் காரணமாக அடிபட்டு உள்ளார்.
அதேபோல் அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்றவர்கள், கடையில் நின்றிருந்தவர்கள் என மொத்தம் 12 பேர் வரை தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஷாஆலம், காலித், பஷீர் மற்றும் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் என 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்றவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் மீட்பு பணியானது இரவு 9.30 மணியை கடந்தும் தொடர்ந்த நிலையிலேயே இருந்தது.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் ஏதோ குண்டுவெடிப்பு நிகழ்ந்து, அந்த இடமே போர்க்களம் போன்று காட்சி அளித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பட்டாசு கடை வெடி விபத்தின் போது காணாமல் போன 11 வயது சிறுவனின் நிலை என்னவென தெரியாமல் தீயணைப்புத்துறையினர் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி இருந்தனர்.
தற்போது அந்த சிறுவன் வெடிவிபத்து நடந்த பட்டாசு கடைக்கு அருகில் இருந்த மளிகை கடையின் சந்துக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இதனை அடுத்து சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.