கடும் தட்டுப்பாட்டால் இறக்குமதி பாதிப்பு! பற்றாக்குறையால் உலகமே பாதிக்கலாம்!
நாம் தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் பலவற்றை நடைமுறையில் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் தற்போது புதுமையாக தயாரிக்கப்படும் கைப்பேசிகள் மற்றும் கார்கள் முதலியவற்றில் மைக்ரோசிப் எனப்படும் மின்னணு கருவி மிக முக்கிய பொருளாக செயல்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு தெரியும் அதன் வேலை என்னவென்று. தற்போது இந்திய நிறுவனங்கள் பல பெரும்பாலும் அதற்காக வெளிநாட்டு இறக்குமதியை தான் நம்பி உள்ளன. அதிலும் குறிப்பாக தைவான், சீனா, ஹாங்காங் போன்ற நாடுகள்தான் இந்த சிப்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாகவும் தைவானில் ஏற்பட்ட வறட்சி நிலை காரணமாகவும் கடந்த ஒரு ஆண்டாகவே இந்த நுண்ணிய சிப்களின் தயாரிப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன. தற்போது இந்தியாவில் மைக்ரோசிப் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
அதன் காரணமாக முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களின் நிகர லாபமும் வெகுவாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மைக்ரோ சிப் உற்பத்தியில் முன்னணியில் உள்ள குவால்காம், இன்டெல் ஆகிய நிறுவனங்கள் அடுத்த நான்கு மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை இதன் பற்றாக்குறை தொடரும் என்று அறிவித்துள்ளன.
அதிலும் சில சிறப்பு வகையான சிப்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை கூட காலம் தொடரலாம் என்றும் சில தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 4ஜி ரக கைப்பேசிகளுக்குள் பொருத்தப்படும் சிப்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக அதன் உற்பத்தியும் உலகமெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.