விவசாயிகளா காரணம்? தொலைகாட்சி விவாதங்கள் தான் அதிக மாசுக்களை ஏற்படுத்துகின்றன! கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்!!
டெல்லியில் தற்போது காற்று மாசு அடைவது குறித்து பல்வேறு தொலைக்காட்சி அலை வரிசைகளிலும் பலதரப்பட்ட விவாதங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. இது குறித்து சுப்ரீம் கோர்ட் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் தொலைக்காட்சி சேனல்களில் நடைபெறும் விவாதங்கள்தான் அதிக அளவு மாசை உருவாக்கி உள்ளன என்றும் காட்டம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு அபாயகரமான அளவில் உள்ளதன் காரணமாக அங்கு பல்வேறு சுவாச பிரச்சனைகளை பொது மக்கள் அனுபவித்து வருகிறார்கள். மேலும் தற்போது அதன் அளவு வழக்கத்தை விட அதிக அளவில் இருப்பதன் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்கக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காற்று மாசு அடைவது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தொலைக்காட்சிகளில் காற்று மாசு தொடர்பாக நடைபெறும் விவாதங்கள் தான் அனைத்தையும் விட அதிகமாக மாசுக்களை உருவாக்குவதாக அவர்கள் மீது கோர்ட் குற்றம் சாட்டியது. இது குறித்து மேலும் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
டெல்லியில் 5 மற்றும் 7 நட்சத்திர ஹோட்டல்களில் அமர்ந்திருக்கும் நபர்கள் எல்லாம் விவசாயிகள் வயல்வெளிகளில் கழிவுகளை எரிப்பதால்தான் டெல்லியில் மாசு ஏற்படுவதற்கு 30 முதல் 40 சதவிகிதம் வரை காரணம் என்று விமர்சிக்கின்றனர். ஆனால் எந்த சூழலில் அவர்கள் அந்த நிலைக்கு தள்ளப் படுகிறார்கள் என்பதை யாரும் ஆராய்வதில்லை.
மேலும் அவர்கள் பயிர்க் கழிவுகளை எரிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பது குறித்து யாரும் கவலை கொள்கிறீர்களா? உங்களிடம் ஏதேனும் அறிவியல் செயல்முறைகள் இருந்தால் அவர்களிடம் சென்று சொல்லுங்கள் என்றும் கூறியுள்ளது.
தற்போது பட்டாசுகள் வெடிக்க அனைத்து மாநிலங்களிலும் கடுமையான தடைகள் விதிக்கப் பட்டிருந்த போதிலும், பட்டாசுகளை வெடிக்க சொல்லப்பட்ட தடை முற்றிலும் புறக்கணிக்கப் பட்டுள்ளது என்றும், தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்கள் தான் மற்றவற்றை எல்லாம் விட அதிக அளவில் மாசை உருவாக்குகின்றன என்றும் அது தெரிவித்துள்ளது.
உண்மையில் அந்த இடத்தில் என்ன நடக்கிறது? என்ன பிரச்சினை? என்பதை பேசுபவர்கள் ஒருபோதும் ஆராய்வது இல்லை. ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்ப சொந்த விருப்பு வெறுப்புகளை கொண்டு பேசுகின்றனர். இது போன்ற விவாதங்களில் அவை அப்பட்டமாக வெளிப்படுகின்றன என்றும் வருத்தம் தெரிவித்துள்ளது.