தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நோய் தொற்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் இதுவரையில் 6.71 கோடி நபர்களுக்கு நோய் தொற்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது, தினசரி ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் செப்டம்பர் மாதத்தில் இருந்து தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகின்றது.
அத்துடன் இந்த மாத இறுதிக்குள் 100% இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது தமிழக அரசு. அதன் ஒரு பகுதியாக வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியானது. அறிவித்தபடி முகங்களை நடத்திவருகிறது ஏற்கனவே தமிழ்நாட்டில் 10 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில், பதினோராவது மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெற இருக்கிறது, ஒரு கோடி அளவில் தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கும் நிலையில் காலக்கெடு முடிவடைந்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கி பதினோராவது தடுப்பூசி முகாம் நடத்தப்பட இருக்கிறது. இதுவரையில் 76% நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 40% நபர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும், செலுத்தப்பட்டு இருக்கிறது.
சென்ற வாரம் மட்டும் 40 லட்சம் அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வாரம் 50 லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது, இந்தநிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டிருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சென்ற வாரம் 18 மற்றும் 21 உள்ளிட்ட தேதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன இதனை அடுத்து இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் ஆயிரத்து 600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன, இந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாமில் 2 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாட்கள் கடந்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் 7 லட்சத்து 93 ஆயிரத்து 24 நபர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்சமயம் மாநகராட்சியிடம் 10 லட்சத்து 99 ஆயிரத்து 195 தடுப்பூசிகள் கையிருப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன ஆகவே இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய நாட்களை கடந்து இருக்கின்ற நபர்கள் அலட்சியமாக இல்லாமல், இந்த தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொண்டு இரண்டாவது தவணை தடுப்பூசி தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தி இருக்கிறது.