எம்பிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆதரவாளருக்கு 33 மாத சிறை தண்டனை!
அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷயர் மாகாணத்தைச் சேர்ந்தவர் ரைடர் வினிகர். இவருக்கு வயது 34. இவர் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் தீவிர ஆதரவாளர் என்று விசாரிக்கையில் தெரியவந்தது. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்புக்கு மிகுந்த ஆதரவு தெரிவித்தார் என்றும், அப்போது ட்ரம்ப் ஆதரவாக அவருக்குப் பின்னால் நிற்காவிட்டால் உங்களை தூக்கில் தொங்க விட்டு விடுவேன் என்று அந்த நாட்டின் தற்போதுள்ள 6 எம்பிக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசிய ஆடியோ பதிவு ஒன்றையும் அந்த எம்பிக்களின் அலுவலகங்களில் கொண்டுபோய் போட்டு வைத்துள்ளார். இது தொடர்பாக ஒரு புகார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்த அவர் வீட்டுக்குச் சென்றனர். அப்போது அவர்களிடம் அவர் பேச மறுத்துவிட்டார். மேலும் அடுத்த நாளே அவர் குடும்பத்துடன் பிரேசில் சென்றுவிட்டார்.
எனவே அவரிடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ள முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் அவர் மீண்டும் நாடு திரும்பியபோது, அவர் போலீசாரிடம் மாட்டிக் கொண்டுவிட்டார். மேலும் தற்போது அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் நடந்தது.
அந்த விசாரணையின்போது அவர் தன் மீது குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார். மேலும் அவர் குற்றவாளி எனவும் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு தற்போது 33 மாதங்கள் சிறைதண்டனை விதித்து அதோடு 15,000 டாலர் அபராதமும் விதித்துள்ளது. 15,000 டாலர் என்பது நமது நாட்டு கணக்கின்படி 11 லட்ச ரூபாய் என்று சொல்லப்படுகிறது. எனவே அவர் அமெரிக்காவின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.