தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிக்கொள்ளும் அதிகாரிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. லஞ்சம் வாங்குவதில் எந்தவிதமான பாகுபாடும் இல்லை. என்றாலும் பெண் அதிகாரிகள் சிக்கும் போது இந்த நாட்டின் நிலை மிகவும் கவலை கொள்ள செய்கிறது.
லஞ்ச அதிகாரிகள் உடைய பெயர் படங்கள் வெளியாகி அவர்களுக்கு இழுக்கு உண்டாக்குவது எல்லாம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை மற்றும் திருந்துவதற்கான முயற்சி என்று நினைக்கலாம். ஆனால் லஞ்சப் பேர்வழிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வது தான் ஆச்சரியமும், அதிர்ச்சியும், தருகிறது.
கசாப்பு கடையில் ஆட்டை வெட்டும் போது அருகில் கட்டப்பட்டு இருக்கின்ற ஆடு தனக்கும் அந்த நிலைதான் என்பதை உணராமல் உணவு உண்பதை மட்டுமே தன்னுடைய வேலையாக கொண்டிருக்கும். அதைபோல தான் தற்சமயம் லஞ்சம் பெறும் அதிகாரிகள் இருக்கிறார்கள். சாதாரண ஜாதி சான்றிதழ், முதல் பத்திரப்பதிவு வரையில் அரசுத்துறைகளில் லஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டு உள்ளது.
நாள்தோறும் லஞ்சம் வாங்கி பணம் சேர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலுவலகத்திற்கு அதிகாரிகள் வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பொதுமக்களிடம் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்று விழிப்புணர்வு உண்டாக்கலாம்0 ஆனால் லஞ்சம் கொடுக்காதவரின் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அரசு அலுவலகத்தில் ஈ மொய்க்காத சாப்பாடு இலை போல் ஆகிவிடுகிறது .அதன் பிறகு பொதுமக்கள் என்னதான் செய்வார்கள்.
அரசுத்துறைகள் டிஜிட்டல் மயம் என்ற நிலைக்கு வந்தாலும் ஏதாவது ஒரு வழியை கண்டுபிடித்து லஞ்சம் வாங்கி விடுகிறார்கள் என்ன செய்தாலும் அதிகாரிகள் திருந்துவதாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் தற்சமயம் லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைகள் முன்பைவிட தீவிரமடைந்து இருக்கின்றன. ஆனால் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு தண்டனை தான் மிக விரைவில் கிடைப்பதில்லை இந்த குறையை சரி செய்தால் லஞ்சத்தை பெரிய அளவில் குறைக்கலாம் என்கிறார்கள்.