தமிழகத்தில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை! அதிரடி வேட்டையில் இறங்கிய சைலேந்திர பாபு!

0
119

தமிழகத்தில் பல குற்றங்கள் நடைபெறுவதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது தான் காரணம், அதே போல தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதன் மூலமாக அதனை வாங்கி ஏமாறும் அப்பாவி மக்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில்தான் கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் அனைத்து மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார், அந்த சுற்றறிக்கையில், தெரிவித்திருப்பதாவது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை செய்தால் அதனை ஒழிக்க எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி வரையில் ஒரு மாத காலம் கஞ்சா மற்றும் லாட்டரி ஒழிப்பு வேட்டை நடத்த வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.

கஞ்சா, குட்கா, லாட்டரி உள்ளிட்ட விற்பனையில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, அதனைத் தொடர்ந்து இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் பொருட்கள் விற்பனை செய்வது உள்ளிட்டவற்றை ஒட்டுமொத்தமாக தடுக்க வேண்டும், மொத்தக் கொள்முதல் விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

கஞ்சா, குட்கா, லாட்டரி, உள்ளிட்ட பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களை அடையாளம் கண்டு மனநல ஆலோசகர் மூலமாக அவர்களை இந்த பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்கள் கொண்டு காவல் ஆய்வாளர்கள் வாட்ஸ்அப் குழுக்களை ஏற்படுத்தி ரகசிய தகவல்களை சேகரித்து விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆந்திர மாநிலத்தில் பயிரிடப்படும் கஞ்சா பயிர் அழிப்பதற்காக ஆந்திர மாநில காவல்துறையினர் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை மாநில போதை தடுப்பு பிரிவு முன்னின்று செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் ரயில்வே காவல்துறையினர் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும், கண்காணிப்பை தீவிரப்படுத்தி கஞ்சா , லாட்டரி உள்ளிட்டவற்றை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கூறியிருக்கிறார்.

இந்த ஒரு மாதத்துடன் இந்த நடவடிக்கை நின்றுவிடாமல் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர்களுக்கு கஞ்சா மற்றும் லாட்டரி உள்ளிட்ட விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்பை வழங்கி, தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பணியினை சென்னை காவல் ஆணையர் கூடுதல் காவல் இயக்குனர் சட்டம் ஒழுங்கு உள்ளிட்டோர் நாள்தோறும் கண்காணித்து அறிக்கை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார்.

Previous articleஅரசியல் காழ்புணர்ச்சிகாக மத்திய அரசை வைத்து அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்! அண்ணாமலை சாடல்!
Next articleமாவட்டச் செயலாளர்களுக்கு முக்கிய கடிதம் எழுதிய ராமதாஸ்! பரபரப்பில் பாமகவினர்!