குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து! செல்போன் பறிமுதல்!

0
116

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த 8ஆம் தேதி இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்ட்டரில் பயணம் செய்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 13 பேர் பலியானார்கள்.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமனம் செய்யப்பட்ட விமானப்படை ஏர் மார்ஷல் விபத்து நடைபெற்ற இடம் மற்றும் விபத்து நடப்பதற்கு முன்னால் வீடியோ எடுத்த ரயில்பாதை பகுதி, ஹெலிகாப்டர் வான் வழியாக பறந்ததன் கீழே இருக்கின்ற நில மார்க்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

அதோடு விபத்து நடைபெற்ற சமயத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள், பொதுமக்கள், உள்ளிட்டவர்களை வருவாய்த்துறையினர் சார்பாக விசாரணை செய்து வருகிறார்கள். அதோடு படுகாயத்துடன் ராணுவ அதிகாரிகளை மீட்ட அவசர ஊர்தி ஓட்டுனர்கள், உதவியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், என 20க்கும் மேற்பட்டவர்கள் இடம் விமானப்படை விசாரணை செய்து வருகிறது.

அதோடு சம்பவ இடத்தில் தீயில் கருகி கிடந்தவர்கள் எந்த நிலையில் இருந்தார்கள்? அவர்கள் உயிருக்கு போராடினார்களா? என்பது தொடர்பாகவும், விசாரணை செய்து வருவதுடன், விபத்துக்கான காரணங்கள் மற்றும் நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல காவல் துறையினரும் விசாரணை செய்து வருகிறார்கள், இந்த சூழ்நிலையில், நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் ஒரு சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதாவது முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேர் பலியான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் அந்த ஹெலிகாப்டரை வீடியோ எடுத்த நபரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் பதிவாகி இருக்கும் வீடியோ எப்போது பதிவுசெய்யப்பட்டது, அதில் இருக்கும் தகவல்கள் என்னென்ன, அவை உண்மைதானா? என்பதைக் கண்டறிவதற்காக அந்த செல்போன் கோவையில் இருக்கின்ற தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதோடு விபத்து நடைபெற்ற நஞ்சப்ப சத்திரம் பகுதியில் இருக்கின்ற உயர் பரிமாற்ற மின் கம்பிகள் மற்றும் உயர் மின் அழுத்த மின் கம்பங்கள் இருக்கின்றதா? அப்படி இருந்தால் அவை சேதமடைந்து இருக்கின்றதா? என்பதை கண்டறிவதற்காக மின்சார துறைக்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது.

இந்த கடிதத்திற்கான விளக்கம் கிடைத்தவுடன் மேலும் ஆதாரங்களை கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று தெரிகிறது. அதோடு தீப்பிடித்து எரிந்த அந்த ஹெலிகாப்டரில் மீதம் இருக்கின்ற பாகங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பாகங்கள் கிடைக்கும் பகுதியில் மரத்துண்டுகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன என சொல்லப்படுகிறது.

மேலும் ஹெலிகாப்டரின் இறக்கை, வால் பகுதியை மீட்டெடுக்கும் பணியில் விமானப்படை, ராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் முழு முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். விபத்து நடைபெற்ற பகுதி மலைப் பகுதி என்ற காரணத்தால், அந்த பாகங்களை அப்படியே எடுக்க இயலவில்லை. ஆகவே ஹெலிகாப்டரில் மீதம் இருக்கின்ற பாகங்களை வெட்டியோ, அல்லது உடைத்தோ, பிரிக்கப்பட்டு வருகின்றது என சொல்லப்படுகிறது.

அதோடு சம்பவம் நடைபெற்ற பகுதி அருகே இருக்கின்ற வனப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்பது தொடர்பாகவும் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த குழுவினர் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Previous articleஇதை செய்திருந்தால் நாம் ஆட்சியை கைப்பற்றி இருப்போம்! மருத்துவர் ராமதாஸ் பேச்சு!
Next articleதமிழகத்தில் வெகுவாக குறைந்த பருவமழை!