குன்னூர் அருகே கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிர் இழந்தார்கள்.
இதில் விங் கமாண்டர் வருண் சிங் மட்டும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், முதலில் குன்னூர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை பெங்களூரில் ராணுவ மருத்துவமனையில் தற்போது மருத்துவர்கள் இடம் மாற்றி சிகிச்சை கொடுத்து வருகிறார்கள். அவரை காப்பாற்றுவதற்கு இரவுபகலாக மருத்துவர்கள் போராடி வருகிறார்கள்.
கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற இந்த கோர விபத்து நாடு முழுவதையும் கவலையில் ஆழ்த்தியது, அன்று மாலை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட மூத்த அமைச்சர்கள் அனைவரும் கண்ணீர் மல்க உரையாற்றியது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்திய ராணுவத்தில் இதுவரையில் இவ்வாறான ஒரு உச்சபட்ச பதவி ஏற்படுத்தப்படவில்லை, ஆனால் தற்போது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தரைப்படை, கப்பற்படை, விமானப்படை, என்ற மூன்று படைகளுக்கும் தனித்தனியே தளபதிகள் இருந்தாலும் இந்த மூன்று படைகளையும் ஒன்றிணைத்து அந்த மூன்று படைகளுக்கும் ஒரே தலைமையாக முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவியை உருவாக்கியது. அந்த பதவியை உருவாக்கிய பின்னர் அந்தப் பதவியில் முதல்முதலாக அமர்ந்தது பிபின் ராவத் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் இந்திய அரசு இந்த பதவியை முதன் முதலில் உருவாக்க முற்பட்டபோது அரசியல் கட்சிகள் பலவும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள் .அதாவது முப்படைகளையும் சேர்த்து ஒருவர் தலைமை வகிக்கிறார் என்றால் அது இந்தியாவில் ராணுவ ஆட்சிக்கு வழிவகுத்துவிடும் என்பதே அரசியல்வாதிகளின் கருத்தாக இருந்தது.
இந்த முப்படைகளின் தலைவராக குடியரசுத் தலைவர் இருந்தபோதிலும் இந்த முப்படைகளுக்கும் தனித்தனியே தளபதிகள் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனாலும் இந்த முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு தளபதியாக இந்திய ராணுவ முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவியில் பிபின் ராவத் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில், குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிடுவதற்காக ராணுவ தளபதி மனோஜ் முகுந்து நரவனே இன்று குன்னூருக்கு வருகை தருகிறார். அதன் பிறகு அவர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். இதனையடுத்து ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற சமயத்தில் மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், உள்ளிட்டோருக்கும் நரவனே பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அதன் பிறகு பிற்பகல் 12 30 மணி அளவில் ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற நஞ்சப்ப சத்திரம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அதன்பிறகு அந்தப் பகுதி பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.