நாங்கள் சட்டத்தை மீற மாட்டோம் ஜால்ரா போடாதீர்கள்! முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிரடி!

0
146

தமிழக அரசை கண்டிக்கும் விதத்தில் அதிமுக சார்பாக நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது.

இந்த போராட்டத்தில் தமிழகத்தில் அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட நபர்களின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அந்த விதத்தில் திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விதமாகவும், கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் முன்னாள் சபாநாயகர் தனபால், அதிமுக சட்டசபை உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், பி ஆர் ஜி அருண்குமார், கே ஆர் ஜெயராம், உள்ளிட்டோர் பங்கேற்று கொண்டு உரையாற்றி இருக்கிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய முன்னாள் அமைச்சர் வேலுமணி கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் ஒன்றாக திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டு உள்ளது என்றும், அதிமுகவின் எழுச்சியானால் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்றும், கூறினார் ஏழு மாதத்தில் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்து இருக்கின்ற அரசு திமுக அரசு என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

அதோடு தேர்தலின்போது தெரிவித்த 525 வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என கூறினார். பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததை நிறைவேற்றவேண்டும். அதேபோல நீட் தேர்வு காரணமாக, மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். நீட்தேர்வு காரணமாக எத்தனை உயிர்கள் போய்விட்டது? மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது அது தவறு நீட் தேர்வை ரத்து செய்வதாக தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின் அதனை ஏன் செய்யவில்லை என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பத்திரிக்கைகள் மிரட்டப்படுகின்றன முக்கிய பத்திரிக்கைகள் திமுகவிற்கு ஆதரவான செய்திகளை வெளியிடுகின்றன, திமுக ஆட்சியில் பாசிட்டிவ் நியூஸ் எதுவும் கிடையாது. அதிமுக திட்டங்களை தான் திமுக செய்து கொண்டு உள்ளது ஆட்சி மாற காரணம் பத்திரிக்கையாளர்கள் தான் பத்திரிக்கைகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என கூறியிருக்கிறார்.

சென்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 50 வருடங்களில் இல்லாத வளர்ச்சியை வழங்கி இருக்கின்றோம். சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளிலும் அதிமுக வென்றதன் காரணமாக, கோயம்புத்தூர் மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறது. பத்து வருடங்களில் எங்கும் கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி உள்ளிட்டவை அறவே இல்லை காவல்துறை அதிகாரிகள் திமுகவின் பேச்சை கேட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.

திமுக ஆட்சி நிலையாக இருக்காது என்றும் நிச்சயமாக அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் காவல்துறை அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அதிமுகவினர் மீது பொய்யான வழக்கு போடப்பட்டால் காவல்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். எங்களை சீண்டி பார்க்க வேண்டாம், சோதனை, வழக்கு எதற்கும் நாங்கள் அஞ்சமாட்டோம் எந்தத் தவறு செய்தாலும் தட்டிக் கேட்போம், என்று கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்த்து பேசினால் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போடப்படுகிறது, பொய் வழக்கு போடும் திட்டத்தை அரை போட்டு யோசிப்பதாக கூறினார் முன்னாள் அமைச்சர் வேலுமணி. கோயமுத்தூர் மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட வளர்ச்சிப் பணியில் தொடர வேண்டும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் திமுகவை பொதுமக்கள் புறக்கணித்து இருக்கிறார்கள், திமுக அரசு மக்கள் விரோத அரசு சென்னை வெள்ளத்திற்கு முறையாக தூர் வாராததே காரணம் கூறினார்.

திமுகவை கண்டிக்கும் விதத்தில் ஆர்ப்பாட்டம் என்று சொன்னால் முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை செய்கிறார்கள். கட்சிக்கும், தொண்டர்களுக்கும், தலைவருக்கும், விசுவாசமாக தான் இருந்தேன். திட்டம் போட்டு சோதனை செய்கிறார்கள் தமிழகத்தில் அமைதி இல்லை, பாதுகாப்பு இல்லை, 500க்கும் அதிகமான கொலைகள் திமுக ஆட்சியில் நடைபெற்றிருக்கின்றன என கூறியிருக்கின்றார்.

சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படவேண்டும் மழை வெள்ளம் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அரசு நிவாரணம் வழங்கவில்லை. பொய் வழக்குப் போடுவதை காவல்துறை நிறுத்திக்கொள்ள வேண்டும், கோயமுத்தூரில் தான் பொய் வழக்குகள் அதிகமாக போடப்படுகின்றன, காவல்துறையினருக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என கூறியிருக்கிறார்.

எந்த சூழ்நிலையிலும் சட்டத்தை நாங்கள் மீற மாட்டோம் தயவுசெய்து ஆளும் கட்சியினருக்கு ஜால்ரா போட வேண்டாம், பொங்கலுக்கு பரிசு பொருட்கள் மட்டுமல்லாமல் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொடுக்க வேண்டும். இந்த ஆட்சி 5 வருடம் இருக்காது. கூடிய விரைவில் முடிவுக்கு வந்துவிடும், அரசு அதிகாரிகள் பயத்தால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மறுபடியும் போராட்டம் நடத்துவோம் கோயம்புத்தூரை புறக்கணிக்கக் கூடாது என்று கூறினார் முன்னாள் அமைச்சர் வேலுமணி.

அதன்பிறகு பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய வேலுமணி கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 500க்கும் அதிகமான வேலை உத்தரவுகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஸ்மார்ட் சிட்டி மற்றும் மேம்பால வேலைகள் மெதுவாக நடைபெற்று வருகின்றன. எங்களை காழ்ப்புணர்ச்சியுடன் பழி வாங்குகிறார்கள், ஆனால் பொதுமக்களை பழிவாங்க கூடாது நிறுத்தப்பட்டு இருக்கின்ற வேலைகளை முன்னெடுக்கவேண்டும், காழ்ப்புணர்ச்சியுடன் நடத்தப்படும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை உள்ளிட்டவற்றை சட்டரீதியாக சந்திப்போம் என்று கூறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் வேலுமணி.

Previous articleபுதிய வகை நோய் தொற்று! எச்சரிக்கும் உலக விஞ்ஞானிகள்!
Next articleமீண்டும் ஏற்படவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்தடுத்து தமிழக மக்களை கதறவிடும் வானிலை ஆய்வு மையம்!