முன்னாள் அதிமுகவின் நிர்வாகி விஜய நல்லதம்பி பல்வேறு நபர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் மற்றும் அவருடைய உதவியாளரிடமும் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து இருந்ததாகவும், மேலும் கட்சி பணிகளுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் என்று ஒட்டுமொத்தமாக 3 கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும். தெரிவிக்கப்படுகிறது.
இந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருடைய உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி, உள்ளிட்ட 4 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் சென்ற மாதம் 15-ஆம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தார்கள்.
இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று காலை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, இதற்கிடையில் நேற்று காலை விருதுநகரில் நடைபெற்ற அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார்கள்.
இந்த சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களை பிடிப்பதற்காக மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், அதன் எண்ணிக்கை தற்சமயம் 6ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
என்னதான் அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், பொதுமக்கள் இடையே அவருக்கு எப்போதும் ஒரு நன்மதிப்பு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால் அவர் அமைச்சராக பொறுப்பு வகித்த காலங்களில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்களை சரமாரியாக விமர்சனம் செய்தார். ஒரு சில இடங்களில் அவர் செய்த விமர்சனங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது.
ஒரு சிலர் இவர் பேசுவதை பார்த்து காட்டுமிராண்டி என்று தெரிவித்தாலும், பலர் மனதில் பட்டதை அப்படியே வெளியில் சொல்லும் வெள்ளைமனதுகாரர் கே.டி.ஆர் என்று தெரிவித்தார்கள்.
அவர் அந்த சமயத்தில் விமர்சனம் செய்த போதே திமுக அவரை கட்டம் கட்டி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எப்பொழுது ஆட்சிக்கு வருவது, எப்பொழுது அவர் மீது நடவடிக்கை எடுப்பது, என்பது உள்ளிட்ட சிந்தனையை தன்னகத்தே கொண்டிருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது நேரம் கைகூடி வந்து விட்டதாக எண்ணி அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதிதான் இந்த தேடுதல் வேட்டை என்று சொல்லப்படுகிறது.