மருத்துவ கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் அதிரடி உத்தரவு!

Photo of author

By Sakthi

முதலமைச்சர் ஆளுநர் உள்ளிட்ட மிக முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் பயணம் செய்யும்போது அவர்களுடன் செல்லும் மருத்துவர்களுக்கு இனோவா கார் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்து இருக்கிறார் என்றும், சொல்லப்படுகிறது.

மருத்துவ கல்வி இயக்குனருக்கு இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அதி முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் வரிசையில் செல்லும் மருத்துவர்களுக்கு பழைய வாகனங்களே கொடுக்கப்படுகின்றன. பிரமுகர்களின் வாகனங்களுக்கு ஈடாக இந்த வாகனங்களால் செல்ல முடிவதில்லை. அவ்வாறு செல்ல முயலும்போது அது மருத்துவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதில்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே இது போன்ற அதி முக்கிய பிரமுகர்களுடன் செல்லும் மருத்துவர்களுக்கு குறைந்தது இனோவா கார் வகையில் வசதி செய்து தரவேண்டும். வாடகைக்கு எடுத்தாவது இந்த வசதி வழங்கப்பட வேண்டும். இது குறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு உரிய முறையில் எடுத்து தெரிவிக்கப்பட வேண்டும். இதற்கான ஒப்புதல் எதுவும் பெறப்பட வேண்டுமானால் அதனை செய்யவேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடுகிறார்.

இதற்கு முன்னதாக 2017ஆம் வருடம் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த சமயத்தில் வாகன வரிசையுடன் செல்ல வேண்டிய அருள்செல்வன் என்ற மருத்துவ உதவி பேராசிரியர் கார் விபத்துக்குள்ளானது. விழுப்புரத்தை சேர்ந்த 45 வயதுடைய அந்த மருத்துவர் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார் என்று சொல்லப்படுகிறது.

மாமல்லபுரம் அருகே அவருடைய கார் விபத்துக்குள்ளானதில் அவர் பலியானார். உரிய வாகனம் ஏற்பாடு செய்து கொடுக்காதது தான் காரணம் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது. அப்போது மருத்துவர்கள் அமைப்புகளின் சார்பாக முதலமைச்சரின் கான்வாய் வாகனத்திற்கு ஈடாக செல்லக்கூடிய நல்ல நிலையில் இருக்கின்ற கார்களை மருத்துவ குழுவினருக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்டு அப்போதே அது தொடர்பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பல பகுதிகளில் பலமுறை முதலமைச்சர் வாகன வரிசையில் செல்லும் மருத்துவர்களுக்கு புதிய கார் வசதி செய்து தராமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கடந்த அக்டோபர் மாதம் மறுபடியும் எஸ்டிபிஐ மருத்துவர் சங்கத்தினர் சுகாதாரத்துறை செயலாளரிடம் முறையிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள், மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு இந்த உத்தரவை மிகவும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் மறு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

மிக முக்கிய நபர்கள் செல்லும் கால்வாயில் செல்லும் மருத்துவர்களின் பாதுகாப்புக்காக அரசு ஆணையிட்டது. அதனை ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் நடைமுறைப்படுத்தாமல் இருந்ததன் காரணமாக, அரசு செயலாளரிடம் எடுத்துச்செல்லப்பட்டு தற்சமயம் தெளிவுபடுத்தபட்டிருக்கிறது என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் சாமிநாதன் கூறினார் என்றும் சொல்லப்படுகிறது.

மிக முக்கிய பிரமுகர்களின் பயணத்தின்போது அந்தந்த பகுதி அரசு மருத்துவ கல்லூரியைச் சார்ந்த இணை அல்லது துணை பேராசிரியர் தலைமையில் ஒரு மருத்துவ குழு உடன் செல்வது நீண்ட கால வழக்கமாக இருந்து வருகிறது.