15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்! ஒரே நாளில் 40 லட்சம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி சாதனை!

Photo of author

By Sakthi

புதிய வகை நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், மத்திய மாநில அரசுகள் நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் ஜனவரி மாதம் 3ம் தேதி அதாவது நேற்று முதல் நோய்த்தொற்று தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 25ஆம் தேதி தெரிவித்தார். அதோடு முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வருகின்ற பத்தாம் தேதி செலுத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

நாடு முழுவதும் சுமார் 7 கோடிக்கும் அதிகமான சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சிறுவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கோவின் செயலி மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று இரவு 8 மணி வரையில் இந்த செயலியில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்ததாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நாடு முழுவதும் ஆரம்பமானது. அந்தந்த மாநில முதலமைச்சர்கள் முகாம்களை ஆரம்பித்து வைத்தார்கள். கல்வி நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும், நடைபெற்ற முகாமில் மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார்கள்.

அதிகபட்சமான நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை தங்களுடைய கைப்பேசியில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சில பள்ளிகளில் பெற்றோர் கண்காணிப்பில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. புதியவகை நோய்கள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதை அனைத்து தரப்பு பெற்றோரும் வரவேற்று இருக்கிறார்கள்.

தலைநகர் டெல்லியில் இருக்கின்ற பிராமணர் லோகியா மருத்துவமனையில் நடைபெற்ற சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு அவர் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது, தடுப்பூசி செலுத்திய சிறுவர்-சிறுமிகள் தங்களுடைய நண்பர்களையும் தடுப்பூசி செலுத்துமாறு ஊக்கப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

தமிழகத்தைப் பொருத்தவரையில் 15 முதல் 18 வயது வரையிலான பள்ளி, மாணவ மாணவிகளுக்கு நோய்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று ஆரம்பமானது. சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பகுதியில் இருக்கின்ற சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை தமிழக அரசு தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளை கொண்டு அதனுடைய வீரியத்தை குறைத்து பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பையும் குறைத்து இருக்கிறது. இதன் காரணமாக, மக்களுடைய வாழ்வாதாரம் ஓரளவுக்கு பாதிக்கப்பட்டு வந்தது. மாநிலத்தின் பொருளாதாரம் மீழ்ச்சிப் பாதையில் மறுபடியும் நடை போட ஆரம்பித்தது. எனவே ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த சமயத்தில் தற்சமயம் புதிய வகை நோய் தொற்றுடன் நம்மை மிரட்ட தொடங்கியிருக்கிறது நோய் தொற்று என தெரிவித்திருக்கிறார்.

ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் அதிகரித்த காரணத்தால், வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த நம்முடைய பயணம் மீழ்ச்சிப் பாதையில் இருந்து இன்று சென்றுகொண்டிருந்த அந்த பயணத்தில் சிறிது தடை ஏற்படும் சூழ்நிலை தற்சமயம் ஏற்பட்டிருக்கிறது என கூறியிருக்கிறார்.

முந்தைய கோவிட் வைரசை விட பல மடங்கு வேகமாக பரவக்கூடியது இந்த புதிய வகை வைரஸ் தொற்று அதன் காரணமாகத்தான் இதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அதில் பரவல் வேகம் அதிகம் நோயின் தாக்கம் தமிழகத்தில் நிச்சயமாக அதிகரிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதை தடுப்பதற்காக நமக்கு முன்னால் இருக்கக்கூடிய முக்கியமான கேடயம் முகக்கவசம் தான் என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதன் காரணமாக, எல்லோரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், புதிய வகை வைரஸ் உருமாறி இருந்தாலும், நம்முடைய நாட்டில் செலுத்தப்படும் தடுப்பூசிகள் நல்ல நோய்த் தடுப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது. தடுப்பூசியால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியால் புதிய வைரஸ் தாக்கினால் கூட அந்த நோயின் தாக்கம் குறைவாக தான் இருக்கும்.

அத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களில் இறப்பு விகிதம் மிக மிக குறைவு என்பதை தான் மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆகவே நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் உயிர்காக்கும் தடுப்பூசியை எல்லோரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களில் இன்னும் இரண்டு தவணைத் தடுப்பூசியும் செலுத்தி கொள்ளாதவர்கள் நிச்சயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அன்புடன் பணிவோடு உரிமையுடன் உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களில் ஒருவனாக, கெஞ்சி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் என்ற முறையில் மட்டும் அல்லாமல் உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து உங்களை அன்புடன் மீண்டும், மீண்டும், நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். தடுப்பு ஊசி செலுத்தி கொள்வோம், புதிய வைரஸ் தாக்கத்தை தடுத்து நிறுத்துவோம், என்ற உறுதியை நீங்கள் இந்த நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ள வேண்டும், எதிர்வரும் காலகட்டத்தில் இந்த நோய் தொற்றிலிருந்து விடுபட்டு இருக்கக் கூடிய மாநிலம் நம்முடைய தமிழகம் என்ற பெயரை நாம் எடுத்தாக வேண்டும்.

அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பும் நிச்சயமாக தேவைப்படுகிறது அரசு நினைத்தால் அதை வெற்றி பெற வைத்து விட முடியாது. அரசுடன் பொது மக்களாக இருக்கக்கூடிய நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், ஒரு கையால் தர இயலாது இரண்டு கைகளால் தான் தப்ப முடியும் என்று கூறியிருக்கிறார்.

நாடு முழுவதும் நடைபெற்ற சிறுவர்களுக்கான முகாமில் நேற்று ஒரே நாளில் 40 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்து இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதில் 15 முதல் 17 வயதிற்கு உட்பட்ட 37 லட்சத்து 84 ஆயிரத்து 212 சிறுவர்கள் தடுப்பூசி சேர்த்துள்ளதாக கோவின் செயலியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 32 ஆயிரத்து 493 சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 ஆயிரத்து 427 பேர் தடுப்பு ஊசி செலுத்தி இருக்கிறார்கள்.