தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் மற்றும் போடிநாயக்கனூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்ட ஒரு பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி செயலாளர் மிலானி என்பவர் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என்று சொல்லப்படுகிறது.
இந்த மனுவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது ரவீந்திரநாத் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் கூடிய பிரமாண பத்திரத்தில் அவருடைய சொத்து உள்ளிட்ட விவரங்களை தவறாக குறிப்பிட்டு இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு தாக்கல் செய்த வேட்புமனுவில் ஓபிஎஸ் அவர்களும் தவறாக சொத்து விவரங்களை குறிப்பிட்டிருக்கிறார், அவர் தாக்கல் செய்த தேர்தல் அறிக்கையில் வங்கியில் கடனாக வாங்கப்பட்ட ரொக்க கணக்குகளும், தேர்தல் சமயத்தில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளும் மற்றும் இதர விவரங்களும், தவறாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் மனுதாரர்.
இந்த வழக்கில் தேனி நடுவர் குற்றவியல் நீதிமன்றம் பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும், விசாரணை அறிக்கையை பிப்ரவரி மாதம் 7-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டு இருக்கிறது.
அந்த உத்தரவின் அடிப்படையில் நேற்றைய தினம் பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் மீது தேனி மாவட்டம் குற்றப்பிரிவு காவல்துறையினர் இபிகோ 156/3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.
அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், விசாரணையின் முடிவில் தான் அவர்கள் இருவரும் கைது செய்யப்போடுவார்களா? அல்லது பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் வழங்கப்படும் விளக்கங்களை கேட்டறிந்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுமா? என்பது தெரியவரும்.