சீனாவில் முதல் முதலாக தோன்றிய நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் காலடி எடுத்து வைத்தபோது ஒரு மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தும் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதே வருடம் மார்ச் மாதத்தில் முதல் பலியை கொடுத்தபோது கூட நாட்கள் செல்ல, செல்ல, அதன் வீரியம் அதிகரிக்கும் என்று யாருக்கும் தோன்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இருந்தாலும் கூட யாரும் எதிர்பாராத ஒரு வினை தான் அது வழங்கி வருகிறது 2020 ஆம் வருடம் முழுவதும் நோய்த்தொற்றின் முதல் அலை காரணமாக, ஒட்டுமொத்த நாடும் தலைகீழாக புரண்டு நின்றது.
இதற்கு குணப்படுத்தும் மருந்துகளும், தடுப்பூசிகளும், இல்லாததால் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியானார்கள் லட்சக்கணக்கானவர்கள் படுக்கையில் விழுந்து எழுந்தார்கள்.
சென்ற வருடம் தொடக்கத்தில் நோய்த்தொற்றின் மேகம் குறைந்தது அப்படியே தடுப்பூசி பயன்பாட்டிற்கும் வந்துவிட்டதால் இதன் காரணமாக, நோய்த்தொற்றை விரட்டி விடலாம் என்ற புது நம்பிக்கை பிறந்தது. இருந்தாலும் அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒன்றைத்தான் நோய்த்தொற்று வழங்கியது. சென்ற வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டாவது அலையாக தாக்கத் தொடங்கிய நோய்தொற்று அடுத்தடுத்து கோரத்தாண்டவம் ஆடிவிட்டது.
இந்த முறை டெல்டா, டெல்டாபிளஸ் என்று பல வகைகளில் உருமாறி தாக்கிய வைரஸ் தொற்று இதன் காரணமாக, பொதுமக்கள் அதனை எதிர்கொள்ள இயலாமல் போய்விட்டது. அவ்வளவு ஏன் மத்திய, மாநில, அரசுகளும் கூட இந்த கண்ணுக்குத் தெரியாத நோய்தொற்றுக்கு முன்னால் மண்டியிட்டு விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.
தடுப்பூசி பணிகள் ஒரு புறம் நடைபெற்று வந்தாலும் பண்டிகை காலம் மற்றும் பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்கள் காரணமாக, ஏற்பட்ட மக்கள் நெரிசல் நோய்த்தொற்றின் பரவலுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. விளைவு முதல் அலையில் சுமார் 1 லட்சம் பலிகளை கொண்ட நோய்த்தொற்று இரண்டாவது அலையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை வாரி சென்றுவிட்டது.
ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் பற்றாக்குறையும், மருந்துகள் பற்றாக்குறை, என்று சுகாதார உட்கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக ஆட்டம் கண்டுவிட்டது. அனைத்திற்கும் மேலாக மயான பற்றாக்குறை நிலவியது தான் சோகத்திலும் சோகம்.
இதுபோன்ற வரலாற்று துயரத்துடனாவது நோய்தொற்று ஒழியும் என்று நினைத்தால் இந்தியாவை இந்த நோய் தொற்றின் மூன்றாவது அலையும் பதம் பார்க்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அப்போதே எச்சரிக்கை செய்தார்கள். ஆகவே தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தவும் தெரிவித்திருந்தார்கள்.
அவர்கள் தெரிவித்ததை போலவே மூன்றாவது அலையும் தற்சமயம் நாட்டில் ஊடுருவி விட்டது, இது அலையல்ல சுனாமி என்று தான் சொல்லவேண்டும். தென்ஆப்பிரிக்காவில் கண்டறிய பட்ட புதிய வகை நோய் தொற்று காரணமாக இந்தப் புத்தாண்டின் ஆரம்பத்திலேயே நோய்த்தொற்றின் மூன்றாவது அலை எழ தொடங்கியிருக்கிறது.
இதற்கு முந்தைய இரண்டு அலைகளை விடவும் மிகப்பெரிய சூறாவளியாகவே இந்த புதிய வகை நோய் தொற்று சுழன்றடித்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 28ம் தேதி 9 ஆயிரத்து 195 என்று இருந்த தினசரி பாதிப்பு ஒரே வாரத்தில் 58 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்துவிட்டது.
இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 1.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சாதாரண பொதுமக்கள் முதல் மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், விளையாட்டு, அரசியல், உள்ளிட்ட பிரபலங்கள் என்று அனைத்து தரப்பினரையும் தன்னுடைய மாய வலையில் விழுத்தி இருக்கிறது இந்த புதிய வகை நோய் தொற்று.
தற்போது நாடு முழுவதும் போடப்பட்டிருக்கின்ற தடுப்பூசி பயணிகளின் எண்ணிக்கை சுமார் 150 கோடியைத் தாண்டி இருக்கின்ற சூழ்நிலையில், நோய்த்தொற்றின் மூன்றாவது அலை இத்தனை வேகமாக சுழன்று அடிப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால் மூன்றாவது அலையில் பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பது தான். மேற்படி 24 மணிநேரத்தில் 1.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் பலி எண்ணிக்கை வெறும் 146 ஆக மட்டுமே இருக்கிறது.
இதற்காக மத்திய, மாநில, அரசுகளும், சுகாதாரத்துறையும், பொதுமக்களும் மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்பதுதான் மருத்துவ நிபுணர்களின் கருத்து என்று சொல்லப்படுகிறது. ஆகவே நோய்த்தொற்றை விரைந்து கட்டுப்படுத்த மாநில அரசுகள் தனித்தனியாக பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறார்கள்.
என்னதான் அரசும், சுகாதாரத்துறையும், நோய் தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டு இருந்தாலும் ஒவ்வொரு தனிமனிதனும் நோய் தொற்றுக்கு எதிராக ஆயுதத்தை தூக்கினால் மட்டுமே இதை ஒழிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில், தடுப்பூசி ஒன்று மட்டுமே நோய் தொற்றுக்கு எதிரான ஆயுதமாக இருக்கிறது, அதே போலவே நோய் தொற்றுக்கு எதிரான கேடயமாக முகக் கவசம் இருக்கிறது சமூக இடைவெளி உள்ளிட்ட நோய்த்தொற்றுக்கு பொருத்தமான நடவடிக்கைகளை பின்பற்றுவதுதான் இதற்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று சொல்கிறார்கள்.
ஆகவே நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொண்டு அதற்கு பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே இந்த சூறாவளியை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.