தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டம்! அதிமுக திமுகவை சேர்ந்தவர்கள் நேரடி மோதல் பாளையங்கோட்டையில் பரபரப்பு!

0
86

தமிழக அரசின் சார்பாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி பாளையங்கோட்டை மனகவளம் பிள்ளை நகர் கென்னடி தெருவில் இருக்கின்ற நியாயவிலைக் கடையில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்றது. அந்த பணியை திமுகவை சேர்ந்தவர்கள் பார்வையிட்டு கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கே வந்த அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர் கணேஷ் என்பவர் பொங்கல் பரிசு தொகுப்பு கரும்பு தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து திமுகவின் பிரமுகர்களும் மற்றும் அதிமுக பிரமுகர்களிடையே இடையே மோதல் உண்டானது. அப்போது கணேஷ் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், திமுகவை சேர்ந்தவர்கள் தாக்கியதாக குற்றம் சுமத்தி இருக்கிறார்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த அதிமுக பகுதி செயலாளர் ஜெனி தலைமையில் அந்தக் கட்சியினர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டதாகச் சொல்லப்படுகிறது. கணேஷை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதன்பிறகு காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கு நடுவே சம்பவத்தின்போது திமுகவை சேர்ந்த மணி என்பவர் தன்னை அதிமுகவினர் தாக்கியதாக தெரிவித்து ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை திமுகவினர் சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவத்தால் பாளையங்கோட்டை பகுதியில் ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டது.