மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! முதல் நாளிலேயே கோட்டை விட்ட இந்திய அணி!

0
96

கேப்டௌனில் நேற்று மதியம் 2 மணி அளவில் ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து இந்திய அணி 223 ரன்கள் சேர்த்து இருக்கிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் 12 ரன்களும், மயங்க் அகர்வால் 15 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா, விராட் கோலி ஜோடி நிதானமாக ஆடியது.பொறுமையுடன் விளையாடிய புஜாரா 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தவுடன் அடுத்ததாக வந்த ரகானே 9 ரன்களிலும், ரிஷப் பண்ட் 27 ரன்களிலு,ம் அஸ்வின் 2 ரன்களிலும், ஷர்துல் தாகூர் 12 ரன்களிலும், பும்ரா ரன் எதுவும் எடுக்காமலும், முகமது ஷமி 7 ரன்களுக்கும், ஆட்டம் இழந்தார்கள்.

நிதானமாக விளையாடி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 201 பந்துகளை சந்தித்து 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவ் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென்ஆப்பிரிக்க அணியின் சார்பாக ரபாடா 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜென்சன் 3 விக்கெட்டுகளையும், ஆலிவியர் மற்றும் நிகிடி கேஷவ் மஹராஜ் உள்ளிட்டோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்க அணி தன்னுடைய பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக மார்கனுடன் ஜோடி சேர்ந்த மகராஜ் 6 ரன்களுடனும், மார்கன் 8 ரன்களுடனும், ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.

ஆட்ட நேர இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்து இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.