இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் சென்ற பல ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில், பல சமூக ஆர்வலர்களும், மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களும் மற்றும் திரையுலகைச் சார்ந்தவர்கள், அதிலும் மிக முக்கியமாக மாணவர்கள், இளைஞர்கள், என்று பலரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மறுபடியும் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த 2017ஆம் வருடம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள்.
அதிலும் தலைநகர் சென்னையில் மெரினாவில் முதன்முதலாக தொடங்கிய இந்த மாபெரும் ஜல்லிக்கட்டு புரட்சி நாட்கள் செல்ல, செல்ல, தமிழ்நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. இதனால் ஒட்டுமொத்த இந்தியா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமும் கூட தமிழகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தது.
அப்போது முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் அவர்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் இந்த பாரம்பரிய மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக செயல்பட்டார். ஆகவே அப்போது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது.
இந்த சூழ்நிலையில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக, கடந்த 2017ஆம் வருடம் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு சட்டம் இயற்றியது.
அந்த விதத்தில், தற்போது வருடம்தோறும் பொங்கல் தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் இந்த வருடம் நோய்த்தொற்று காரணமாக, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தமிழக அரசு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்கியது.
அந்த விதத்தில், கடந்த போகிப்பண்டிகை அன்று மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்ற நிகழ்வாக இருக்கிறது. அந்த விதத்தில் கடந்த 14 மற்றும் 15 உள்ளிட்ட தேதிகளில் அவனியாபுரம் மற்றும் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த சூழ்நிலையில், தற்போது மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பமாகி இருக்கிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் சேகர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றார்கள், இதனைத் தொடர்ந்து முதலாவதாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பமானது. இந்த போட்டியில் சுமார் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த போட்டியை நேரில் காண 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த போட்டியில் சிறந்த காளைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பிலும், சிறந்த மாடுபிடி வீரர்கள் உதயநிதிஸ்டாலின் சார்பிலும், கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் கிரைண்டர், குக்கர், ப்ரிட்ஜ், உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன.