2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகின்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, கங்கை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, உள்ளிட்ட நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.
சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி கிடைத்தவுடன் நதிகள் இணைப்புத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். 44000 கோடியில் நீர்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
டிரோன்கள் மூலமாக பயிர்கள் ஆய்வு செய்ய திட்டம் மேற்கொள்ளப்படும் நாடு முழுவதும் ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கின்ற அவர் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 18 லட்சம் புதிய வீடுகள் கட்ட 48000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், 3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலமாக குடிநீர் வழங்க 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
வடகிழக்கு மாநில மேம்பாட்டிற்காக 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்தியாவில் தொடர்ந்து இணையதள பரிவர்த்தனை அதிகரித்து வருவதாகவும், 25 மாவட்டங்களில் 25 டிஜிட்டல் வங்கி மையங்கள் அமைக்கப்படும் என்றும், மின்னணு பாஸ்போர்ட் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார் மத்திய நிதியமைச்சர்.