ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் பழமைவாய்ந்த சிலைகளை ஒரு சிலர் விற்க முயற்சித்ததாக மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய காவல்துறையினர் பழமைவாய்ந்த சிலைகளை விற்க முயற்சி செய்த ஒருவரை கையும், களவுமாக, பிடித்திருக்கிறார்கள்.
அவரிடம் நடைபெற்ற விசாரணையில் பிடிபட்ட நபர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த அலெக்சாண்டர் என்பதும், இவர் பாஜக சிறுபான்மையினர் பிரிவு ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக இருப்பதும், தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து தன்னிடம் 7 பழமை வாய்ந்த சிலைகள் உள்ளதாகவும், அருப்புக்கோட்டை காவலர் இளங்குமரன் மற்றும் விருதுநகரைச் சேர்ந்த கருப்புசாமி உள்ளிட்டோர் கொடுத்ததாகவும், அவர் கூறியிருக்கிறார்.
இவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், காவலர் இளங்குமரன் மற்றும் கருப்புசாமி உள்ளிட்டோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தார்கள்.
அதில் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் காவலர் இளங்குமரன் திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாக நரேந்திரன் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சார்ந்த கணேசன் மற்றும் விருதுநகரை சார்ந்த கருப்புசாமி உள்ளிட்டோர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருக்கின்ற ஒரு மலையடிவார கிராமத்தில் சிலைகள் விற்கப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, அங்கு சென்றதாகவும் தாங்கள் 4 பேரும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் என்று தெரிவித்து பழமையான 7 சிலைகளை வாங்கிக்கொண்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதோடு பறிக்கப்பட்ட சிலையை இராமநாதபுரம் மாவட்டம் கூரிசேத்தனார் பகுதியை அடுத்த அய்யனார் கோவிலின் பின்புறமிருக்கின்ற கால்வாயில் மறைத்து வைத்ததாகவும், கூறியிருக்கிறார். இந்த சிலைகளை பாஜகவின் பிரமுகரான அலெக்சாண்டரிடம் வழங்கிய 5 கோடி ரூபாய்க்கு விற்க முயற்சி செய்ததும், தற்சமயம் தெரியவந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கால்வாயில் மறைத்து வைத்திருந்த 2 அடி உயரமுள்ள நடராஜர் சிலை, 1.5 அடி உயரமுள்ள நாககன்னி சிலை, 1 அடி உயரமுள்ள காளி சிலை, முருகன் சிலை, விநாயகர் சிலை, நாக தேவதை சிலை, உள்ளிட்ட 7 பழமைவாய்ந்த சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீட்டிருக்கிறார்கள்.
அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட 7 சிலைகள் எந்த கோவிலை சார்ந்தது என்றும், சிலைகளின் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். அதோடு தலைமறைவாக இருக்கின்ற ராஜேஷ் மற்றும் கணேசன் உள்ளிட்டோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தேடி வருவதாகவும், சொல்லப்படுகிறது.