ஆதி மாரியம்மன் திருக்கோவில் தேரோட்டம்!

Photo of author

By Sakthi

அம்மன் கோவில்களில் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் முதன்மையாக விளங்குவது இனாம் சமயபுரத்திலுள்ள ஆதி மாரியம்மன் கோவிலாகும். இந்தக் கோவிலில் தேர் திருவிழா கடந்த 21ஆம் தேதி ஆரம்பமானது ஆதி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிம்மம், யானை, ரிஷபம், அன்னம், உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார். கடந்த 27ம் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 27ஆம் தேதி நடந்தது. முன்னதாக காலை 9.30 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். இதனைதொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அதிர் வேட்டுகளுடன் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள்.

தேரோடும் வீதி வழியாக வலம் வந்த தேர் மறுபடியும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிச்சட்டி எடுத்தும், கோவிலையடைந்து பயபக்தியுடன் அம்மனை வழிபட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பாக ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. குடிநீர், சுகாதாரம், போன்ற வசதிகளை இனாம் சமயபுரம் ஊராட்சி தலைவர் மகாராணி தெய்வசிகாமணி மேற்பார்வையில் துணை தலைவர் அப்துல்லா மற்றும் வார்டு உறுப்பினர்கள் செய்திருந்தார்கள்.

சமயபுரம் காவல் துறை ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.