தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்தார். அதே வருடம் செப்டம்பர் மாதத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக, அனுமதிக்கப்பட்ட அவர் சுமார் 70 நாட்கள் சிகிச்சையிலிருந்து மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி உயிரிழந்தார்.
இந்தநிலையில், அவர் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதற்கிடையில் அவருடைய மரணத்திற்குப் பிறகு உடனடியாக பன்னீர்செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது அவர் இருக்கும் அறையில் என்ன நடந்தது என்பது தமிழகத்தில் ஒருவருக்கு கூட தெரியவில்லை. அதிமுகவை சார்ந்தவர்கள் விட்ட அறிக்கைகள் மூலமாகத்தான் மருத்துவமனையில் என்ன நடைபெற்று வருகிறது என்று பொதுமக்கள் அறிந்து கொள்ள முடிந்தது.மேலும் அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் அவருடைய உடல்நிலை தொடர்பாக அறிக்கை வெளியிட்டு வந்தது.
இந்த நிலையில் அவர் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் கடந்த 2.5 வருடங்களாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு பிறகு மீண்டும் விசாரணை தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது.
சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகள் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள், என்று 154 பேரிடம் விசாரணை ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்ற சூழ்நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் பேரில் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை நடத்தியது இவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்ததாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே இந்த விசாரணை ஆணையத்தின் 90 சதவீத விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில், தற்சமயம் இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. ஜெயலலிதா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டது முதல் அவருடைய இறுதி நாட்கள் வரையில் அப்பல்லோ மருத்துவமனையில் அவருடன் இருந்த சசிகலா தனது தரப்பு விளக்கத்தை பிரமாண வாக்குமூலமாக ஏற்கனவே ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த சமயத்தில் பெரும்பாலான நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தவர்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்லமும் ஒருவர் என்று தெரிவிக்கப்படுகிறது.இதனால் அவரிடம் விசாரணை நடத்த விசாரணை ஆணையம் ஏற்கனவே முடிவு செய்து அதன்டிப்படையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பதற்கு முன்பாக பன்னீர்செல்வத்திற்கு ஆணையம் பலமுறை சம்மன் அனுப்பியது என்று சொல்லப்படுகிறது.
ஆனாலும் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பன்னீர்செல்வம் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகவில்லை அவருடைய தரப்பில் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. அதேநேரம் நிர்வாக காரணங்களுக்காக ஓரிருமுறை பன்னீர்செல்வம் ஆஜராகும் தேதியை மாற்றியமைத்தது இதன் காரணமாகவும் பன்னீர்செல்வம் ஆணையத்தில் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான் பன்னீர்செல்வத்திடம் விசாரணையை நடத்தி முடித்து விட்டு ஆணையத்தின் விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.
இதனையடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. பன்னீர்செல்வம் தரப்பில் சம்மனை பெற்றுக் கொண்ட நிலையில், அவர் இன்று காலை 10 மணியளவில் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை வாக்குமூலமாக வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல சசிகலாவுடன் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த அவருடைய அண்ணன் மனைவி இளவரசியும் ஆதரவாக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பிய சூழ்நிலையில், அவரும் இன்று ஆஜராவார் என்று சொல்லப்படுகிறது.