தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை! ஆனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் ஏற்கனவே கடந்த 2 ஆண்டு காலமாக நோய் பரவல் அதிகரித்து வந்ததால் பள்ளி, கல்லூரிகள், மூடப்பட்டிருந்தது. தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, மாணவர்களின் கற்றல் திறன் குறைகிறது என்று பலரும் நேரடி வகுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தார்கள்.

ஆனால் நோய் தொற்று பாதிப்பு குறையாததால் இணையதளம் மூலமாக வகுப்புகளை நடத்த தொடங்கியது பள்ளிக்கல்வித்துறை. ஆனாலும் அதிலும் மாணவர்களுக்கு பெரிதாக எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை.இப்படியான சூழ்நிலையில், சமீபத்தில் பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் வழக்கம்போல நடைபெற்று வருகின்ற நிலையில், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்திருக்கிறார். பள்ளி மேலாண்மை குழுவின் கூட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சியில் பெற்றோரின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தினடிப்படையில் பள்ளி மேலாண்மை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.

அதன்படி ஒவ்வொரு அரசு பள்ளியிலும் அமைக்கப்படும் பள்ளி மேலாண்மை குழுக்களில் 20 பேர்

உறுப்பினர்களாகயிருப்பார்கள் இவர்களில் 15 பேர் பெற்றோர், அதிலும் 10 பேர் பெண்கள் மீதமுள்ள 5 நபர்களில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள், சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் நிர்வாகக்குழு அமைக்கப்படவிருப்பதால் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும், மற்ற வகுப்பு மாணவர்கள் வழக்கம்போல பள்ளிக்கு வர வேண்டுமென்றும், தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்திருக்கிறார். மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை என்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.