நவக்கிரகங்களுக்கும், சனி பகவானுக்கும், பைரவர் தான் குரு. சனி பகவான் அர்த்தாஷ்டம, அஷ்டம, கண்டகம், ஏழரை வருட சனி காலம் சனி திசை காலங்களில் ஆட்டிப்படைப்பவர் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் சனி பகவானைப் பொறுத்தவரையில் இந்த ஏழரை ஆண்டு காலங்கள் வழங்குவது துன்பம் தான் என்றாலும் கூட இந்த ஏழரை ஆண்டு காலத்தில் அவர் வழங்கும் படிப்பினை அனைத்தும் வாழ்க்கை முழுமைக்கும் உறுதுணையாக இருக்கும் என்கிறார்கள் அறிஞர்கள்.
இதைப் பற்றி சரியாக தெரியாத சிலர் சனிபகவான் என்றாலே எப்போதும் துன்பத்தை அளிப்பவர் என்று தெரிவித்து வருகிறார்கள். ஆனால் வாழ்க்கையில் நிதர்சனத்தை உணர்த்தி வாழ்க்கை பாடத்தை முழுமையாக கற்றுக்கொள்ள வைப்பவர் சனிபகவான் மட்டுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஆனால் இந்த ஏழரை சனி நடைபெறும் போது சனி பகவானால் உண்டாகும் சில துன்பங்களை தீர்த்து வைப்பவர் பைரவர். ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை மற்றும் வெற்றிலை மாலை அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால் பாயாசம், உள்ளிட்டவற்றை படையலிட்டு அல்லது பூசணியில் மிளகு தீபம், ஒரு பாகற்காய் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ பைரவருக்கு அர்ச்சனை செய்தால் சனி பகவான் பிடியிலிருந்து விடுபடலாம்.
இது பொதுவான பரிகார பூஜையாக இருக்கிறது இதை யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் என சொல்கிறார்கள்.
சனீஸ்வரனுக்கு எள் சட்டி தீபம் ஒருபோதும் ஏற்றவே கூடாது என்கிறார்கள், நெய் தீபம் ஏற்ற வேண்டும் அல்லது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயில் பைரவருக்கு தீபம் ஏற்றினால் சனி தோஷம் நிவர்த்தி பெறும்.
ராசிக்கு சனியின் பார்வை இருந்தால் சனிக்கிழமை காலையில் 9 கருப்பு மிளகை தூள் செய்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அதன்பிறகு கோவிலுக்கு சென்று சனீஸ்வரனுக்கும், பைரவருக்கும், வழிபாடு செய்துவர வேண்டும் என்கிறார்கள்.
ராசிக்கு சனிபகவான் பார்வை இருக்கும் வரையில் பொதுவான பரிகாரம் சனிக்கிழமைகளில் செய்துவரவேண்டும். இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று செய்வது மிகவும் நன்று என்கிறார்கள்.