திருமணம் காலதாமதமின்றி நடைபெற்றாலும் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது காலத்தின் கையில் தான் இருக்கிறது. என்னதான் கணவன், மனைவி, இருவரும் இணைந்து வாழ்ந்தால் கூட இந்த குழந்தை பெற்றுக் கொள்வதை அவர்கள் முழுவதுமாக தீர்மானிக்க முடியாது. குழந்தை எப்போது ஜனனிக்க வேண்டும் என்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது.
இதைத் தவிர்த்து குழந்தை பெற்றுக்கொள்வது எப்போது என்பதை முடிவு செய்யும் உரிமை கணவன் மனைவிக்கான தனிப்பட்ட விருப்பம் என்பது பொதுவானது.
ஆனால் தற்போது ஒரு வினோதமான சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அது தொடர்பாக இப்போது நாம் காணலாம்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சார்ந்த பிரசாத் தன்னுடைய மகனுக்கு 6 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தார். இதுவரையில் அவருக்கு குழந்தை இல்லை இந்த சூழ்நிலையில், பிரசாத் உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு ஒரு வழக்கை தொடர்ந்திருக்கிறார்.
அதாவது அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, என்னுடைய மகனுக்கு வெளிநாடு சென்று படிக்கவும், அமெரிக்காவில் விமானி பயிற்சி எடுத்துக்கொள்ளவும், ஏராளமான பணம் செலவழித்திருக்கிறேன்
அவருடைய திருமணத்தை நட்சத்திர விடுதியில் மிக பிரமாண்டமான முறையில் நடத்தினேன். அவர்கள் வெளிநாட்டிற்கு தேனிலவுக்காக செல்வதற்கு தாராளமாக பணத்தை செலவு செய்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் தற்போது என்னுடைய மகன் கவுகாத்தியிலும், மருமகள் நொய்டாவிலும், பணி நிமித்தம் காரணமாக தனித் தனியே வசித்து வருகிறார்கள்.
அவர்களுடைய திருமணம் நடைபெற்று 6 ஆண்டுகள் கடந்து விட்டது. அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை பற்றியும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை, ஆகவே எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
ஆகவே இன்னும் ஒரு வருடத்திற்குள் எங்களுக்கு பேரக்குழந்தைகள் பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லாவிடில் மகன், மருமகள் உள்ளிட்ட இருவரும் 5 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது, எதிர்வரும் 15ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.