தமிழகம் முழுவதுமுள்ள ரேஷன் கடைகளில் நேற்று முதல் நாளை வரை தொடர்ந்து 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், நேற்று முதல் நியாய விலை கடை பணியாளர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களுடைய 7 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்து இந்த போராட்டம் நாளை வரை நடைபெறவிருக்கிறது. அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் அடங்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனர், நியாய விலை கடை ஊழியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்வதற்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டிருக்கிறது.
no work no pay என்ற விதிகளினடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்வதற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்கள் அனைத்தையும் நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருபுறம் நியாய விலை கடை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், மறுபுறம் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் முறைப்படி கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
அதாவது வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்களை அமர்த்தி நியாயவிலைக் கடைகளை திறக்க வேண்டும் என்றும், பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், கூட்டுறவுத் துறை சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.