நீச்சல் குளத்தில் மூழ்கிய வாய்பேச முடியாத 10 வயது சிறுவன்! பயிற்சியாளரின் அலட்சியத்தால் நிகழ்ந்த சம்பவம்!
சென்னை கொளத்தூரில் பயிற்சியாளரின் அலட்சியத்தால் நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயதுடைய வாய் பேச முடியாத சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ரத்னகுமார் மற்றும் இராணி என்ற தம்பதிக்கு வாய் பேச முடியாத 10 வயதான மகன் கீர்த்தி சபரீஸ்கர் இருந்துள்ளார். சிறுவன் கீர்த்தி சபரீஸ்கருக்கு வாய் பேச முடியாததால் அதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதையடுத்து மருத்துவரின் அறிவுரைப்படி பெற்றோர் ரத்னகுமார் மற்றும் இராணி இருவரும் மகன் கீர்த்தி சபரீஸ்கருக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டி சென்னை பெரியார் நகரில் இருக்கும் தனியார் நீச்சல் பயிற்சி பள்ளி ஒன்றில் சேர்த்துள்ளனர். சிறுவன் கீர்த்தி சபரீஸ்கரும் நீச்சல் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
அதே போல கடந்த ஞாயிற்றுக்கிழமையும் சிறுவன் சபரீஸ்கர் பெற்றோருடன் நீச்சல் பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார். பின்னர் தந்தை ரத்னகுமார் காரில் அமர்ந்து வேலை பார்க்க தாய் இராணி அவர்கள் சிறுவன் சபரீஸ்கர் நீச்சல் பயிற்சி பெறுவதை அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
நீச்சல் பழகிக் கொண்டிருந்த சபரீஸ்கர் ஒரு. கட்டத்தில் நீச்சல் குளத்தில் தத்தளிக்க அதை பார்த்த இராணி அதிர்ச்சியடைந்து உடனே நீச்சல் பயிற்சியாளரிடம் மகனை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த நீச்சல் பயிற்சியாளரோ அலட்சியமாக “நீங்கள் பதற்றம் அடைய வேண்டாம். இது போன்ற கடினமான கட்டங்களை தாண்டிதான் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். சபரீஸ்கர் தானாக நீச்சல் அடித்து வருவார்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இராணி தன் கணவர் ரத்னகுமார் அவர்களிடம் விஷயத்தை கூறி அழைத்து வந்து பார்க்கும் பொழுது சிறுவன் சபரீஸ்கர் பேச்சு மூச்சு இல்லாமல் நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருந்துள்ளான்.
இதையடுத்து சிறுவன் சபரீஸ்கரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிறுவன் சபரீஸ்கரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டான் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் காவல்துறையினர் சிறுவன் சபரீஸ்கரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சிறுவன் சபரீஸ்கர் இறப்புக்கு பயிற்சியாளர்களின் அலட்சியம் தான் காரணம் என்று சிறுவனின் பெற்றோர்கள் ரத்னகுமார் மற்றும் இராணி புகார் அளித்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்த சிறுவன் சபரீஸ்கரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நீச்சல் பயிற்சி மையத்தின் உரிமையாளர் காட்வின் அவர்களையும் நீச்சல் பயிற்சியாளர் அபிலாஷ் அவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நீச்சல் பயிற்சியாளரின் அலட்சியத்தால் வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.