விவசாயி வீட்டின் மேற்கூரையை பதம்பார்த்த துப்பாக்கி குண்டு! பெரம்பலூர் அருகே பரபரப்பு!

Photo of author

By Sakthi

பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஒரு விவசாயி இவருடைய மனைவி ராஜாமணி, இவர்களது மகன் பாரதிதாசன், இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மோகனப்பிரியா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோரும் அந்த பகுதியில் இருக்கின்ற ஆஸ்பெட்டாஸ் சீட் கூரையுடன் கூடிய வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், சுப்பிரமணியன் வீட்டின் பின்புறம் சிறிது தூரத்தில் மலை பகுதி இருக்கிறது .அங்கே அரசு சார்பாக துப்பாக்கிச் சூடும் தளம் செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் காலை சுப்பிரமணி ராஜாமணி, உள்ளிட்டோர் வேலைக்கு சென்றிருக்கிறார்கள் அதேநேரம் பாரதிதாசன் வேலைக்கும் சென்று விட்டார் வீட்டில் மோகனப்பிரியா மட்டும் தன்னுடைய குழந்தையுடன் இருந்திருக்கிறார். அப்போது வீட்டின் கூரை பகுதியில் இருந்து திடீரென்று ஏதோ சத்தம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, சத்தம் ஏற்பட்டது என்பது தொடர்பாக மோகன பிரியாவுக்கு தெரியவில்லை என சொல்லப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் ,நேற்று காலை சுப்பிரமணி வீட்டின் கூரைப் பகுதியில் துளை ஏற்பட்டு இருப்பதையும், அதில் இருந்து வெளிச்சம் வீட்டிற்குள் ஊடுருவியதையும் கண்டுபிடித்தார். இதுதொடர்பாக பாரதிதாசனிடம் தெரிவித்த அவர், கூறிய பகுதியில் ஏறி பார்க்குமாறு கூறியிருக்கிறார்.

அதன் அடிப்படையில், பாரதிதாசன் வீட்டு சுவற்றில் வைக்கப்பட்டிருந்த ஏணியின் மூலமாக ஏறி மேற்கூரையில் பார்த்தபோது அங்கே ஒரு துப்பாக்கி குண்டு கிடந்திருக்கிறது. அதனை எடுத்து வந்த அவர் சுப்ரமணியிடம் காட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர்கள் உடனடியாக வருவாய் துறையினருக்கு தகவல் கூறி இருக்கிறார்கள். அதனடிப்படையில், அதிகாரிகள் வந்து பார்வையிட்டார்கள் என சொல்லப்படுகிறது.

அதோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணி மற்றும் காவல்துறையினர் அந்த வீட்டிற்கு வந்து துளை ஏற்பட்டு இருந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி இருக்கிறார்கள். முதல்கட்ட விசாரணையில் அருகில் மலைப்பகுதி இருப்பதும், அங்கே இருக்கின்ற துப்பாக்கிச்சூடும் தளத்தில் இருந்து வந்த துப்பாக்கி குண்டு சுப்பிரமணியன் வீட்டு கூரையை துளைத்து இருக்கலாம் என்பதும் தெரியவந்தது.

அதோடு சுப்பிரமணி வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் பயிற்சிக்கு பயன்படுத்தியதாக இருக்கலாம் என்றும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதோடு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து வந்த துப்பாக்கி குண்டு பாய்ந்து புகழேந்தி என்ற சிறுவன் உயிரிழந்த சூழ்நிலையில், ஒரு விவசாயி வீட்டின் மேற்கூரையை துப்பாக்கி கொண்டு தொலைத்த சம்பவம் அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.