குரங்குகளுக்காக கொண்டாடப்படும் ஒரு திருவிழா! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!
தாய்லாந்தின் லோப்புரி என்ற இடத்தில் சுற்றுலாப்பயணிகளை வரவழைப்பதில் குரங்குகள் மட்டுமே முக்கிய பங்கு வகிக்கின்றன. அதற்காக குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்கு ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அது அங்கு மிகவும் பாரம்பரியமான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
ஆனால் இந்த திருவிழா கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கொண்டாடாமல் நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதன் காரணமாக இந்த ஆண்டு அந்த குரங்கு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மத்திய தாய்லாந்தில் உள்ள லோப்புரியில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.
அங்குள்ள குரங்குகளின் வால் மிகவும் நீளமாக இருக்கும். எனவே அதை காண்பதற்காக என்று அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்குமாம். அதன் காரணமாக அங்குள்ள மக்கள் வருமானம் ஈட்டி வருவதன் மூலம் குரங்குகளை மகிழ்விக்க இந்த விழா நடைபெறுவதாகவும் கூறுகின்றனர்.
சுமார் 2 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து ஆயிரக்கணக்கான குரங்குகளுக்கு விருந்து வைக்கின்றனர். அதை உண்டு குரங்குகள் மகிழ்கின்றன. அங்கு மாக்காக்கள் என்று அழைக்கப்படும் நீண்ட வால்கள் கொண்ட குரங்குகள் நூற்றுக்கணக்கில் ஒரே இடத்தில் மக்களால் உருவாக்கப்பட்ட காய்கறி மற்றும் பழ குவியல்களின் மீது ஏறி வாழை மற்றும் அன்னாசி பழங்கள் சாப்பிடுவதை சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
சில சுற்றுலாப் பயணிகள் குரங்குகள் ஒன்றோடு ஒன்று விளையாடுவதை ஆர்வமாக தங்களது கேமராவின் மூலம் புகைப்படமும் எடுத்தனர். மொரோக்கோ நாட்டு சுற்றுலா பயணியான அயூப் பௌகாரி, இது குறித்து கூறுகையில் அந்த திருவிழாவை பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கிறது. பல குரங்குகள் ஒரே இடத்தில் வந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் இந்த அற்புதக் காட்சி மிகவும் வேடிக்கையாகவும், எங்களுக்கெல்லாம் மிகவும் வியப்பாகவும் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.