மேற்கு வங்கத்தில் பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதி விபத்து! 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! 

Photo of author

By Sakthi

மேற்கு வங்கத்தில் பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதி விபத்து! 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு இரயிலின் மீது சரக்கு இரயில் மோதி இன்று(ஜூன்17) காலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இந்த விபத்து நடந்ததை அறிந்த மீட்புக் குழுவினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த இரயில் விபத்தில் கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு இரயிலின் பல பெட்டிகளும், சரக்கு இரயிலின் பல பெட்டிகளும் தடம் புரண்டது. இந்த விபத்தில் சரக்கு இரயிலை ஓட்டி வந்த லோக்கோ பைலட் உள்பட 5 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த இரயில் விபத்து குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் “மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த இந்த இரயில் விபத்து அதிர்ச்சியை அளிக்கின்றது. விபத்து நடந்த அந்த இடத்திற்கு மருத்துவக் குழுவையும், மீட்புக் குழுவையும் அனுப்பி வைத்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் “இந்த இரயில் விபத்து எதிர்பாராத விதமாக நடைபெற்ற ஒன்று. விபத்து நடந்த இடத்தில் போர்கால அடிப்படையில் மீட்பு பணிஙள் நடைபெற்று வருகின்றது. மீட்பு பணியில் இரயில்வே துறை, தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை ஆகியவை துரிதமாக செயல்பட்டு வருகின்றது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.