DMK CONGRESS: சுமார் 10 வருடங்களுக்கு பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய திமுக, இந்த முறையும் அதனை தக்க வைத்து கொள்ள வேண்டும் என பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. அதிமுகவை போல் இல்லாமல் திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் பரஸ்பர உறவை பேணி பாதுகாக்க முயற்சித்து வருகிறது. ஆனால் அதன் கூட்டணி கட்சிகளோ அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. அதிமுகவின் கூட்டணி பலவீனத்தை பயன்படுத்த நினைத்த திமுகவிற்கு கூட்டணி கட்சிகளும் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் விசிகவிற்கு அடுத்தபடியாக முக்கிய கட்சியாக அறியப்படுவது காங்கிரஸ் தான். இந்நிலையில் பீகார் தேர்தலுக்கு முன்பு வரை திமுகவிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கை கேட்டு வலியுறுத்தி வந்த காங்கிரஸ் பீகார் தேர்தல் முடிவுக்கு பின்பு அமைதியாகிவிட்டது. தமிழக தேர்தலுக்காக, 5 பேர் கொண்ட குழுவை அமைத்த காங்கிரஸ் தலைமை, நாளை ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த பேச்சு வார்த்தையில், கடந்த தேர்தலை விட 2 மடங்கு அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் மீண்டும் வலியுறுத்தும் நோக்கில் இவர்கள் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் திமுக தலைமையோ பீகார் தேர்தலில் தோல்வியடைந்ததை மையப்படுத்தி குறைந்த தொகுதிகளையும், ஆட்சி பங்கையும் மறுக்க திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே காங்கிரஸ் விஜய் கூட்டணியில் சேரப்போவதாக கூறப்படும் நிலையில் காங்கிரசின் கோரிக்கைக்கு திமுக மறுத்தால் அதன் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து கழக குரல் எழுந்து வரும் வேளையில், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தை திமுக கூட்டணியின் முடிவை தீர்மானிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

