MDMK: இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் அதன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் மத்திய அரசு அமல்படுத்திய SIR பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை அதிமுக ஆதரித்தும், திமுக எதிர்த்தும் வருகிறது. இந்நிலையில் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்துள்ளார். இவரது கட்சியான தவெக 2026 தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்ததிலிருந்தே தேர்தல் களம் மேலும் வேகமெடுத்துள்ளது.
அது மட்டுமல்லாமல் இவரது வருகை திராவிட கட்சிகளையே ஆட்டம் காண வைத்து விட்டது என்றே சொல்லலாம். விஜய்யின் அரசியல் வருகையிலிருந்தே மீள முடியாமல் தவிக்கும் அரசியல் களம், தற்போது மற்றொறு கட்சியின் அரசியல் வருகையையும் எதிர் நோக்கி காத்திருக்கிறது. மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்த மல்லை சத்யா நவம்பர் 20 ஆம் தேதி புதிய கட்சி தொடங்க போவதாக அறிவித்திருக்கிறார்.
வைகோ உடனான கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இவர் சட்டசபை தேர்தல்களில் தொடர் தோல்விகளை தழுவினாலும் கட்சிக்காக அயராது உழைத்தவர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் வைகோவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் இவர் புதிய கட்சி தொடங்க போவதாக வெளியான அறிவிப்பு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதிய கட்சி தொடங்கிய உடன், இவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

