NDA ADMK: தமிழக அரசியலின் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் நயினார் நாகேந்திரன். மரியாதையை நிமித்தம் காரணமாகவே இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக கூறினார். இதற்கு பிறகு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் அமித்ஷாவையும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவையும் சந்தித்தார். மேலும், தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஜே.பி. நட்டாவையும் கலந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு அவர் முடிந்த வரை வருகிறேன் என்று கூறியதாகவும் கூறினார். கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
யார் யாருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது, யாரெல்லாம் கூட்டணிக்கு வர தயாராக உள்ளனர் என்பது பற்றி ஜே.பி. நட்டா கேட்டறிந்ததாக நயினார் நாகேந்திரன் கூறினார். தற்போது பாமக, தேமுதிக போன்ற பெரிய கட்சிகளை அதிமுக கூட்டணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக பாஜக முன்னேடுத்துள்ள வீயூகங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனின் இந்த டெல்லி பயணம் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.