TVK BJP: சமீப காலமாகவே தமிழக அரசியலில் அதிகம் பேசப்படும் பெயர் தவெகவும், விஜய்யும் தான். அரசியலில் நுழைந்து சுமார் ஒன்றரை வருடங்கள் கூட பூர்த்தி ஆகாத நிலையில், அதற்கான வரவேற்பு யாரும் எதிர் பார்த்திராத அளவு அதிகரித்துள்ளது. இதனை கண்டு திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தன. ஆனால் தவெக தலைமையில் தான் கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கபட்டதால், முன்னணி கட்சிகள் பின் வாங்கின.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கிய அதிமுகவின் முக்கிய முகமான செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செங்கோட்டையனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என அரசியல் களமே உற்று நோக்கி கொண்டிருந்த சமயத்தில், நேற்று புதிய கட்சியான தவெகவில் தன்னை இணைத்து கொண்டார்.
செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து பல்வேறு தலைவர்களும் தங்களது கருத்தை கூறி வந்தனர். இந்நிலையில் இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினாரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, செங்கோட்டையன் அனுபவம் மிக்க அரசியல்வாதி, இதனால் அவரது முடிவில் நான் கருத்து கூற எதுவும் இல்லை. மேலும், செங்கோட்டையன் தவெகவிற்கு சென்றது அதிமுக-பாஜகவிற்கு பின்னடைவா என்ற கேள்விக்கு, இந்த இணைவு எங்களுடைய கூட்டணிக்கு எந்த பின்னடைவையும் ஏற்படுத்தாதது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

