TVK BJP: கரூரில் நடைபெற்ற தவெகவின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து விஜய் மீதும், தவெகவின் இரண்டாம் கட்ட தொண்டர்கள் மீதும் கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டிருந்ததால் அவருக்கு கடுமையான கண்டனங்கள் வந்ததுடன், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதியப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய விளையாட்டு போட்டி தொடர்பாகவும், அலுவல் காரணங்களுக்காகவும் அவர் டெல்லி சென்றிருப்பதாக ஆதவ் அர்ஜுனா தரப்பினர் தெரிவித்தனர். ஆனால் அவர் டெல்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்திக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக பாஜக தனிக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அதை பற்றி விரிவாக பேச தான் தவெகவின் சார்பாக அவர் டெல்லி சென்றிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதில் ஹேமமாலினி பாஜக எம்.பி.க்கள் கலந்து கொள்ளப் போவதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் மற்றொரு தரப்பினர் தவெக-பாஜக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தான் இந்த சந்திப்பு என்றும் கூறி வருகின்றனர். தவெகவின் பிரச்சனையில் பாஜக உதவுவது அரசியலில் தற்போது பேசு பொருளாக உள்ளது. அதே போல் கட்சியின் பிரச்சனைகளை தீர்க்க அதிமுக, பாமக போன்ற கட்சிகள் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களின் உதவியை நாடியதை போல, ஆதவ் அர்ஜுனாவின் இந்த பயணம் உள்ளதென பலரும் விமர்சித்து வருகின்றனர்.