வாஸ்துபடி காலையில் கண்விழித்ததும் எந்தெந்த பொருட்களை முதலில் பார்த்தால் நல்லது நடக்கும் என்பதற்காக ஆன்மீகத்தில் பல தகவல்கள் இருப்பது போன்றே, நாம் தூங்கும் பொழுது நமது தலையணைக்கு அடியில் ஒரு சில வாஸ்து பொருட்களை வைத்து விட்டு தூங்குவதன் மூலம், நமது வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண முடியும் என்று ஆன்மீகம் கூறுகிறது.
1. எலுமிச்சை பழம்:
இரவு தூங்குவதற்கு முன்பு புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சம் பழத்தை நமது தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி விட்டு, அடுத்த நாள் காலையில் அதை நமது வீட்டின் ஒரு ஓரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதே போன்று தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து விட்டு, அந்த மூன்று எலுமிச்சம் பழத்தையும் வீட்டிற்கு அருகில் உள்ள அம்மன் கோவிலில் உள்ள சூலத்தில் குத்தி விட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மீது இருக்கும் கண் திருஷ்டி தூள் தூளாக சிதறி ஓடிவிடும்.
2. கல் உப்பு:
நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலுமே ஏதேனும் ஒரு தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது, எந்த ஒரு முன்னேற்றத்தையும் காண முடியவில்லை என்று நினைக்கும் பொழுது, ஒரு சிவப்பு நிற அல்லது மஞ்சள் நிற துணியில் கல் உப்பை சேர்த்து மூட்டையாக கட்டிக்கொண்டு அதனை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.
ஏழு நாட்கள் இதனை தொடர்ந்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்கி விட்டு தண்ணீரில் கரைத்து விட வேண்டும். இதனால் காரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.
3. சுத்தமான சந்தனம்:
சமூகத்தில் நல்ல அந்தஸ்துடனும், பெயர் புகழுடனும், அனைவரும் உங்களது கட்டுப்பாட்டில் இருக்கவும், கௌரவமாக வாழவும், கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்கவும் சுத்தமான சந்தனத்தை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். இதனை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு அந்த சந்தனத்தை பயன்படுத்தியும் கொள்ளலாம்.
4. நாணயம்:
வாஸ்து படி தூங்கும் பொழுது தலையணைக்கு அடியில் ஏதாவது ஒரு நாணயத்தை வைத்து தூங்கினால் நிதி நிலை மேம்படும். முக்கியமாக எதிர்பாராத விதத்தில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
5. ஏலக்காய்:
வாஸ்து படி தூங்கும் பொழுது தலையணைக்கு அடியில் ஏலக்காயை வைத்து தூங்கினால், மன அழுத்தம் நீங்கி நிம்மதியாக தூங்குவீர்கள்.
6. கத்தி:
நீங்கள் இரவு தூங்கும் பொழுது கெட்ட கனவுகள் அதிகமாக வருகிறது என்கின்ற பொழுது, உங்களது தலையணைக்கு அடியில் கத்தியை வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் எதுவும் வராது.
7. வாசனை பூக்கள்:
இரவு தூங்கும் பொழுது வாசனை நிறைந்த பூக்களை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் இனிமையான சூழலால் மன நிம்மதியும் இருக்கும். அதுமட்டுமல்லாமல் சீக்கிரமாகவே தூங்கி விடுவீர்கள்.