அஜித் சினிமாவுக்கு வந்து 32 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் நடிக்க துவங்கி குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துவிட்டார். துவக்கத்தில் காதல் கதைகளில் நடிக்க துவங்கி, பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார்.
சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
விஜயை போலவே அஜித்துக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படமும் சூப்பர் ஹிட் அடித்து 250 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம், சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். துபாய் ரேஸில் 3வது பரிசை பெற்ற அஜித் டீம் ஐரோப்பாவில் 2வது பரிசை பெற்றது. இந்நிலையில்தான், பத்மபூஷன் விருது நேற்று ஜனாதிபதி கையில் வாங்கியிருக்கிறார் அஜித்.
விருது வாங்கிய பின் விமானம் மூலம் அவர் சென்னை வந்தபோது அவரை வரவேற்க அங்கே கூட்டம் கூடியது. தள்ளுமுள்ளு ஏற்பட்ட அஜித் மீதும் சிலர் மோதினார்கள். சிலர் அவருக்கு சால்வை போட வந்தார்கள். அவர்களையெல்லாம் ஒரு வழியாக சமாளித்து அஜித் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அஜித் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கியபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக காலில் சிறிய அளவில் அடிபட்டது. அதற்காக அஜித்துக்கு பிசியோதரபி சிகிச்சை செய்யப்படுவதாக செய்திகள் கசிந்திருக்கிறது.