96 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம் குமார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பள்ளி பருவத்தில் வரும் காதலை இந்த படத்தில் அழகாக காட்டியிருந்தார். இந்த படம் பலருக்கும் தங்களின் பழைய காதலை நினைவு படுத்தியது.
அதன்பின் பிரேம் இயக்கிய திரைப்படம்தான் மெய்யழகன். இந்த படத்தில் அரவிந்த்சாமியும், கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். உறவுகளின் முக்கியத்துவத்தை இப்படம் பேசியது. சின்ன வயதிலேயே சொந்த ஊரை விட்டு சென்னை வந்து செட்டில் ஆன குடும்பத்தில் இருந்து அரவிந்த்சாமி ஒரு திருமணத்திற்காக மீண்டும் சொந்த ஊருக்கு போகிறார்.
அப்போது அவருக்கு ஏற்படும் உணர்வுகள், அவரிடம் பழகும் உறவுகள், அதனால் அவருக்கு ஏற்படும் மாற்றங்கள் என மனித உணர்வுகளை மிகவும் ஆழமாக காட்டியிருந்தனர். தஞ்சாவூரில் வசிக்கும் மக்களின் அன்பு, அவர்கள் உறவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றை இதில் பிரேம் பதிவு செய்திருந்தார்.
சின்ன வயதில் பழகிய நபரை யார் என தெரியாமலேயும், ‘நீங்கள் யார்?’ என அவரிடம் கேட்க முடியாமலும் அவருடனே ஒரு நாள் கழித்துவிட்டு அவரின் அன்பை தாங்க முடியாமல் அவரிடம் சொல்லாமலேயே அங்கிருந்து ஓடி வரும் அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த படத்தை தெலுங்கு நடிகர் நானி பாராட்டியுள்ளார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘தமிழில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் மெய்யழகன். 1000 கோடி போட்டாலும் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது. மெய்யழகன் படத்தில் இருந்த அந்த உணர்வை திரையில் கடத்துவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால், அதை பிரேம் செய்து காட்டியிருக்கிறார். இந்த படத்தை பார்த்துவிட்டு கார்த்திக்கு போன் செய்து பாராட்டினேன்’ என பேசியிருக்கிறார்.