சினிமாவில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் சூரி. சுசீந்தரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த படத்திற்கு பின் பல படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்தார். விஜயுடன் ஜில்லா, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் அஞ்சான், ரஜினியுடன் அண்ணாத்த என பெரிய நடிகர்களுடன் நடித்தார்.
குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அப்படி நடித்து வந்தவரை இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வைத்தார். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார் சூரி.
அதோடு, இனிமேல் காமெடி நடிகனாக நடிக்கமாட்டேன் எனவும் முடிவெடுத்தார். விடுதலை 2 படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும், கருடன் படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. இப்போது மாமான், மண்டாடி என இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், மண்டாடி பட விழாவில் பேசிய சூரி ‘ஒன்னுமே இல்லாம வந்தேன். பெயிண்ட் அடிச்சேன். அப்புறம் அடிச்சி புடிச்சி சினிமாவுக்கு வந்துட்டேன். இப்ப சக்திக்கு மீறி சம்பாதிச்சிட்டேன்.. எனக்கு இது போதும். இதுக்கு அப்புறம் எனக்கு பிடித்த படங்கள் பண்ணினால் போதும். அதிகமாக சம்பாதிக்கணும்னு அவசியமே இல்லை. அப்பப்போ புடிச்ச படங்களை பண்ற அளவுக்கு கலைத்தாய் என்னை வைத்திருந்தால் போதும்’ என உருகி பேசியிருக்கிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி மதுரையில் நிறைய இடங்களில் சூரி ஹோட்டல் தொழிலையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.