ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் உள்ளிட்டோர் நிலம் வாங்கி கொடுப்பதாக தெரிவித்து 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக நடிகர் சூரி அடையாறு காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
இந்தப் புகாரினடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன் 6 மாத காலத்திற்குள் முடித்து வைக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கு குறித்து நடிகர் சூரி இதுவரையில் 3 முறை மத்திய குற்றப்பிரிவில் விசாரணை செய்வதற்காக ஆஜராகியிருக்கிறார். வழக்கு குறித்து கேட்கப்பட்ட 110 கேள்விக்கு நடிகர் சூரி பதிலளித்திருப்பதாக காவல் துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையையடுத்து நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன், உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
நம்பிக்கை மோசடி, பண மோசடி, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோருக்கு சம்மனனுப்பி தனித்தனியாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.