நடிகை சித்ராவின் கொலை வழக்கு! மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை!

Photo of author

By Sakthi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா இந்த நிலையில், நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியது.

இதுகுறித்து நடிகை சித்ராவின் தாயார் புகார் அளித்ததின் பெயரில் நடிகை சித்ராவின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு சித்ராவின் கணவர் ஹேமந்த்தை கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தார்கள்.

இந்த நிலையில், ஹேமந்த் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு சென்றமுறை விசாரணைக்கு வந்த சமயத்தில் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டபின் பதின்மூன்று சாட்சிகள் மறுபடியும் விசாரிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவானது நேற்றைய தினம் மறுபடியும் விசாரணைக்கு வந்த சமயத்தில், காவல் துறை சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் நடிகை சித்ராவின் நடத்தையில் அவருடைய கணவர் தன்னை சந்தேகப்பட்டதால் தான் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார் என்று தெரிவித்தார்.

அதோடு சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன. அவருடைய தொலைபேசி உரையாடல்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன. இந்த ஆய்வின் அறிக்கைகள் வரும் பத்தாம் தேதி கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டு இருக்கிறார்.