அமலுக்கு வந்தது புதிய ஆதார் விதிமுறை! 10 வருடங்களுக்கு ஒரு முறை நிச்சயமாக இதை செய்ய வேண்டும்!

0
194

ஆதார் என்பது ஒரு நாட்டின் குடிமகனின் அடையாள எண்ணாக மாறிவிட்டது. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரையில் எல்லோருமே ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு, ஒட்டுமொத்த நாட்டிலும் அது அமல்படுத்தப்பட்டது.

ஆதார் எண்ணை முதலில் வாங்குவது சற்றே கடினமாக இருந்தாலும் நாட்கள் செல்ல, செல்ல தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் கூட ஆதார் சேவை மையம் ஆரம்பம் ஆகிவிட்டது.

இதனை அடுத்து ஆதார் எண் சார்ந்து பலவிதமான குற்றச்சாட்டுகள் அவ்வப்போது ஏற்பட்டிருக்கிறது. அதிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் அரசும் புதுப்புது பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்திருக்கிறது.

அதனடிப்படையில் சமீபத்தில் அரசு வெளியிட்ட அறிக்கையின்படி ஆதார் சார்ந்த புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் குறிப்பிட்டுச் செல்ல வேண்டும் என்றால் 10 வருடங்களுக்கு ஒரு முறை தங்களுடைய ஆதார் தகவல்களை நீங்கள் புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முழுமையான விவரங்களை தற்போது நாம் பார்க்கலாம்.

கடந்த வியாழன் கிழமை அன்று ஆதார் விதிமுறைகளில் அரசாங்கம் பல்வேறு புதிய மாற்றங்களை அமல்படுத்தியிருக்கிறது. இந்த புதிய மாற்றங்களின் அடிப்படையில் தங்களுக்கு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை உங்களுடைய ஆதார் தகவல்களை புதுப்பிக்க வேண்டும். இதன் மூலமாக பொது அடையாளத் தரவும் சேகரிப்பு மையத்தில் தங்கள் தொடர்பான தகவல்கள் சரியானதாகவும், துல்லியமாகவும் இருக்கும் என்பது உறுதி செய்யப்படுகிறது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ட்ரோல்மென்ட் தேதியிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறை தங்களுடைய அப்போதைய அடையாள சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட சரியான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றாலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சரியான ஆவணங்களை புதுப்பிப்பது பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்படுகிறது.

தற்சமயம் UIDAI தங்களுடைய அடையாள சான்றுகளை புதுப்பிக்க ஏற்றுக் கொண்டு வருகிறது. அடையாளச் சான்றில் தங்களுடைய பெயர் மற்றும் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும். வழக்கமாக அடையாளம் சான்றாக நீங்கள் பயன்படுத்தும் பாஸ்போர்ட், பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை நீங்கள் சமர்ப்பித்து தங்களுடைய ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.

நீங்கள் தங்களுடைய ஆவணங்களை புதுப்பிப்பதற்காகவே UIDAIயில் ஒரு சிறப்பு அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. தங்களுடைய மை ஆதார் போர்ட்டலில் அல்லது ஆதார் என்ற செயலிலும் அப்டேட் டாக்குமெண்ட் என்ற அம்சத்தை பயன்படுத்தி தங்களுடைய ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். தங்களுக்கு இணையதளத்தின் மூலமாக ஆவணங்களை எப்படி புதுப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக சரியாக தெரியவில்லை என்றால் தாங்கள் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று ஆவணங்களின் நகலை வழங்கி ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இன்று தங்களுடைய முகவரியையும் சுய சேவை புதுப்பிப்பு போர்ட்டலில் அப்டேட் செய்து கொள்ளலாம். இதில் தாங்கள் தங்களுடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் தங்களுடைய இருப்பிடம் இதனை மட்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். தங்களுடைய ரேகை மற்றும் புகைப்படம் உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பதற்கு தாங்கள் ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டும்.

Previous articleதமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்படும்?
Next articleகே எல் ராகுல் வேண்டாம்… இவர கேப்டனா போடுங்க- ஸ்ரீகாந்த் கருத்து!