அனைத்து கட்சிகளும் 2026 தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் பட்சத்தில் அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இ.பி.எஸ்-யின் ஆதரவாளர்கள் கட்சிக்கு இ.பி.எஸ் மட்டும் போதும் என்று கூறி வருவதும், பிரிந்து சென்றவர்களின் ஆதரவாளர்கள் கட்சி ஒருங்கிணைய வேண்டும் என்று கூறி வருவதும் பரவலாக அறியப்பட்டு வருகிறது.
இந்த நிலைமை, அ.தி.மு.க.- வின் எதிர்கால அரசியல் நிலையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க பல அணிகளாக பிரிந்து செயல்படுவதாக பலரும் விமர்சித்து வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அ.தி.மு.க ஐந்து அணிகளாக பிரிந்திருக்கிறது என்று விமர்சித்திருந்தார்.
இவ்வாறான விமர்சனங்கள் அனைத்திற்க்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இதனை மறுத்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “அ.தி.மு.க.-வில் ஐந்து அணிகள் இல்லை; நாங்கள் ஒரே அணியாக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார். மேலும் அவர், “எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், கட்சியின் நலனை மனதில் வைத்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வே வெற்றி பெரும் என்றும் கூறியுள்ளார்.
அ.தி.மு.க தற்பொழுது எதிர்க்கட்சியாக கூட உருமாற முடியாத நிலையில் இருப்பதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவரின் இந்த கருத்தும், இதனையே சுட்டிகாட்டுவதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு கட்சி ஒருங்கிணைந்தால் பிறிந்து சென்றவர்களின், ஆதரவாளர்களின் வாக்கின் மூலமும், அவர்களின் முகமாக அறியப்பட்டு வரும் தொகுதிகளின் மூலமும் கட்சி வலுப்பெற வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.