ADMK: எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்திலிருந்து அதிமுகவின் முகமாக அறியப்படுபவர் செங்கோட்டையன். ஆனால் இபிஎஸ் அதிமுகவின் தலைவராக பதவியேற்றத்திலிருந்தே செங்கோட்டையனுக்கு கட்சியில் உரிய மதிப்பும், மரியாதையும் கிடைக்காமல் அவருக்கான செல்வாக்கும் கட்சியில் குறைந்து கொண்டே சென்றது. இதனால் ஆத்திரமடைந்த செங்கோட்டையன் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இபிஎஸ்யால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டுமென இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.
உட்கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசியதாக கூறி செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறித்தார் இபிஎஸ். இதனை தொடர்ந்து, செங்கோட்டையன் தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளில் மிகவும் நிதானமாக செயல்பட்டார். இந்நிலையில், அதிமுக தலைமைக்கு எதிராக செயல்படுபவர்களுடன் செங்கோட்டையன் ஒன்றாக பயணித்தது பேசு பொருளானது. இதனை தொடர்ந்து அதிமுக தலைமைக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களை பற்றி சிறிதும் யோசிக்காமல் கட்சியை விட்டு நீக்குவது இபிஎஸ் பழக்கம்.
அந்த வகையில் செங்கோட்டையனின் செயல்பாடுகள் அவ்வாறே அமைந்துள்ளது. அப்படி இருக்க செங்கோட்டையனை இன்னும் கட்சியில் வைத்திருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து அரசியல் ஆர்வலர்கள் கூறுகையில், செங்கோட்டையனை இபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கினால் அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் விரிசல் ஏற்படும், மேலும் கோபிசெட்டிபாளையத்தின் முகமாக அறியப்படும் செங்கோட்டையனின் பதவிகளை பறித்ததற்கே அப்பகுதி மக்கள் இபிஎஸ் மீது கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் அவரை கட்சியிலிருந்து அடியோடு நீக்கினால் அது தேர்தல் நேரத்தில் இபிஎஸ்க்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.

