ADMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் போது அதிமுக-வில் இருந்த முன்னணி தலைவர்களான டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ், செங்கோட்டையன், சசிகலா போன்றோர் பல அணிகளாக பிரிந்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கிய பின் அவர் டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தகவல் பரவியது.
இதனை தொடர்ந்து இ.பி.எஸ்-ம் பாஜக தலைவர்களை சந்திப்பார் என்று அனைவரும் கூறி வந்த நிலையில், தனது பிரச்சாரத்தை வானிலை காரணம் காட்டி தள்ளி வைத்து விட்டு, நேற்று டெல்லி சென்று பாஜகவின் உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில், இனி அதிமுகவின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடக்கூடாது என்று இபிஎஸ் தெளிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், அதிமுக, பாஜக கூட்டணிக்குள் இ.பி.எஸ் தனது தனித்துவத்தை வெளிகாட்ட முயற்சிப்பது தெளிவாகிறது.
இந்த கோரிக்கைக்கு பாஜக ஒப்புக்கொண்டால், பாஜகவிற்கு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிக சீட்டுகள் ஒதுக்கப்படும் என்ற பேச்சுவார்த்தையும் நடந்ததாக பரவலாக பேசப்படுகிறது. அதிமுக-பாஜக கூட்டணியின் எதிர்காலம் குறித்து நீண்ட நாளாக சந்தேகங்கள் நிலவி வந்த நிலையில், இ.பி.எஸ் எடுத்த இந்த முடிவு இரு கட்சிகளின் உறவை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.